ஜனாதிபதிக்கு எதிராகவும் குற்றப்பிரேரணை அவசியம்: ஹிருனிகா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டியது அவசியமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹிருனிகா பிரேமசந்திர கூறியுள்ளதாவது,

“மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும். ஆனாலும் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் மாத்திரம் இதனைக் கொண்டுவரக்கூடாது.

மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் ஜனாதிபதிக்கு எதிராகவும் குற்றப் பிரேரணை தயாரிக்கப்படுமாயின் அதற்காக 75 பேரின் கையொப்பங்களை திரட்டித் தருவதற்கு தயாராகவுள்ளேன்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நிறுத்துவாரென ஜனாதிபதி கூறியதாக அண்மையில் கேள்விப்பட்டேன். அவ்வாறு அவரை நிறுத்தினால் பொதுஜன பெரமுன பாரிய பின்னடைவை நிச்சயம் சந்திக்கும்” என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்