மாந்தை மேற்கு வலிமையான பிரதேசம்: கேதீஸ்வரன்

மாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை இப்போதுதான் உணர்ந்துள்ளேன் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின் 3 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் கள்ளியடி இலுப்பைக்கடவை ஐயனார் கோவிலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மன்னார் மாவட்டத்தில் சைவத்திற்கும், தமிழிற்கும் சேவை செய்கின்ற இங்குள்ள அதிதிகளுக்கு நான் முதலில் தலைசாய்க்கின்றேன்.

இலைமறை காயாக சமூகத்திற்கும், தமிழிற்கும், சைவத்திற்கும் சேவை செய்த பலரை வெளிகொண்டு வந்துள்ளீர்கள். அந்தவகையில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

மாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை நான் இப்போதுதான் உணர்ந்துள்ளேன்.

நான் பிரதேச செயலாளராக மன்னார், முசலி பிரதேசச் செயலகங்களில் கடமையாற்றியுள்ளேன். ஆனால் மாந்தை மேற்கிலுள்ள வலிமையையும் துடிப்பையும் நான் எங்கும் காணவில்லை” என எஸ்.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக  மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.சிறிபாஸ்கரன், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் ம.செல்வரத்தினம், இலங்கை சைவ நெறி கழகத்தின் தலைவர் கி.பிரதாபன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபை இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன், இந்து ஆலஙய்களின் ஒன்றிய தலைவர் மு.கதிர்காமநாதன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, விருது வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளருக்கு ‘மாந்தை மேற்கு ஒளிக்கீற்று’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்