நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ஜோனி பெயர்ஸ்டோ – ஜோசன் ரோய் ஆகியோர் களமிறங்கினர்.

நியூஸிலாந்து அணியினர் மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களினால் திக்குமுக்காடிய ரோய் 17 ஓட்டத்துடன் 5.4 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியாறினார் (28-1).

முதல் விக்கெட் 28 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டதனால் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜோ ரூட்  நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர மறுமுணையில் பெயர்ஸ்டோ ஓட்டங்களை வேகமாக பெற முற்பட்டார்.

இதனால் இங்கிலாந்து அணி 10 ஓவரில் 39 ஓட்டத்தையும், 15 ஓவரில் 56 ஓட்டத்தையும் பெற்றது. 17 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட கிரேண்ட்ஹோம் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ரூட்டை 7 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்ற, 19.3 ஆவது ஓவரில் பெயர்ஸ்டோ 36 ஓட்டத்துடன் லொக்கி பெர்குசனின் பந்தில் போல்ட் ஆனார் (71-3).

 

ரூட்டின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் இயன் மோர்கன் 23.1 ஆவது ஓவரில் 9 ஓட்டத்துடன் ஜேம்ஸ் நீஷமின் பந்தில் லொக்கி பெர்குசனின் அபார பிடியொடுப்பினால் களம் விட்டு நீங்கினார்.

இதனால் இங்கிலாந்து அணி 86 ஓட்டத்துக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து நிலை தடுமாறியது. இந் நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக பென் ஸ்டோக் மற்றும் பட்லர் ஜோடி சேர்ந்து நியூஸிலாந்து அணியின் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது.

அதன்படி 27.3 ஆவது ஓவரில் பென்ஸ்டோக் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களை கடந்ததுடன், 37.2 ஆவது ஓவரில் 150 ஓட்டங்களையும் கடந்தது.

 

ஒரு கட்டத்தில் 40 ஓவருக்கு 170 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றவேளை வெற்றிக்கு 60 பந்துகளுக்கு 72 ஓட்டம் என்ற நிலை இருந்தது. ஆடுகளத்தில் பென் ஸ்டோக் 43 ஓட்டத்துடனும், பட்லர் 42 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வந்தனர்.

தொடர்ந்து 43.2 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி பட்லர் அரைசதம் கடக்க மறுமுணையில் பென் ஸ்டோக் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் அரைசதம் பெற்றார்.

32 பந்துகளுக்கு 46 ஓட்டம் என்ற இக்கட்டான நிலையிருந்த வேளையில் பட்லர் 44.5 ஆவது ஓவரில் மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 59 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டம் சூடு பிடித்தது.

45 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 196 ஓட்டங்களை பெற, வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 46 என்ற நிலையானது. (பென்ஸ்டோக் – 51, கிறிஸ் வோக்ஸ் – 0).

46.1 ஆவது ஓவரில் கிறிஸ் வோக்ஸ் லொக்கி பெர்குசனின் பந்து வீச்சில் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க (203-6), நியூஸிலாந்து அணிப் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கியது.

7 ஆவது விக்கெட்டுக்காக பிளாங்கட் களமிறங்கி துடுப்பெடுத்தாட 18 பந்துகளுக்கு 34 என்ற நிலையும் 12 பந்துகளுக்கு 24 என்ற நிலையுமிருக்க பிளாங்கட் 48.3 ஆவது ஓவரில் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (220-7).

தொடர்ந்து வந்த ஜோப்ர ஆர்ச்சரும் 49 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் எதுவித ஓட்டமின்றி டக்கவுட் ஆக இங்கிலாந்தின் வெற்றிக்கு 6 பந்துகளுக்கு 15 என்ற இக்கட்டான நிலையானது.

ஆடுகளத்தில் பென்ஸ்டோக் 70 ஓட்டத்துடனும், அடில் ரஷித் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இறுதி ஓவரை எதிர்கொண்ட பென்ஸ்டோக் அந்த ஓவரின் முதல் இரு பந்துகளையும் டொட் ஆக்கினார். எனினும் மூன்றாவது பந்தில் 6 ஓட்டத்தை விளாசித் தள்ளினார். அத்துடன் நான்காவது பந்தில் 2 ஓட்டங்களை பெற முற்பட்ட வேளை இங்கிலாந்துக்கு அதிர்ஷ்ட காற்று வீசி அந்த பந்தில் மொத்தமாக 6 ஓட்டம் பெறப்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு 2 பந்துகளில் 3 ஓட்டம் நிலையானது.

அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டம் பெற முற்பட்டபோது அடில் ரஷித் ரன் அவுட் ஆக, ஒரு பந்துக்கு 2 ஓட்டம் என்ற நிலையானது. இறுதிப் பந்தை பென்ஸ்டோக் எதிர்கொண்டார். எனினும் அந்த ஓவரில் 2 ஓட்டம் பெற முற்பட ஒரு ஒட்டம் மாத்திரம் பெறப்பட்டதுடன், மார்க்வூட் ரன் அவுட் ஆனார்.

இதனால் சூப்பர் ஓவர் என்ற நிலையானது. சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், கிரேண்ட்ஹோம் மற்றும் மேட் ஹென்றி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓட்டங்களை பெற, நியூஸிலாந்தின் வெற்றிக்கு 16 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

16 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணிக்கும் இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டம் என்ற நிலையானது எனினும் அந்தப் பந்தில் ஒரு ஓட்டம் மாட்டும் பெறப்பட, சூப்பர் ஓவர் விதிப்படி ஒரு அணி அதிகபடியான நான்கு ஓட்டங்களை பெற்ற அணிக்கே வெற்றி கிட்டும்.

அதன்படி இப் போட்டியில் இங்கிலாந்து அணியே அதிகபடியான நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளியமையினால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றி 44 வருடகால கிரிக்கெட் கனவை நனவாக்கியது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்