மூடிமறைக்கப்பட்டுள்ள உண்மைகளை தெரிவுக்குழுவில் அம்பலப்படுத்துவேன்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியை நாம் அறிந்துவிட்டோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு இருக்கின்றது. அங்கு சென்று எமது சாட்சியங்களை வழங்க மற்றவர்கள் மாதிரி நாங்கள் பயப்படமாட்டோம். மறைக்கப்பட்ட உண்மைகளைத் தெரிவுக்குழு முன்னிலையில் நாம் அம்பலப்படுத்துவோம்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த வருட இறுதியில் வங்கிக் கடனுக்கான வட்டி வீதம் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும். இதனால் பெரும் எண்ணிக்கையிலானோர் நன்மையடைவர்.

இந்த வருட ஆரம்பத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 66 ஆயிரம் பேர் இலங்கைக்கு வருகை தந்தனர். ஆனால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களையடுத்து இந்த எண்ணிக்கை 37 ஆயிரமாகக் குறைவடைந்தது. இருப்பினும், இதன் பின்னர் அரசு முன்னெடுத்த துரிதமான வேலைத்திட்டத்தின் காரணமாக ஜுன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 63 ஆயிரமாக அதிகரித்தது. இந்த மாத இறுதியளவில் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சமாக அதிகரிக்கும். இதேபோன்று ஆகஸ்ட் மாத இறுதியளவில் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எமது அரசுக்கு எதிரான எத்தகைய சவால்களையும் எதிர்கொள்வதற்கு நாம் தயார். எதிரணியினர் எமது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்தனர். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் கோரத்தை முன்னெடுப்பதற்குக்கூட எதிர்க்கட்சியினரால் முடியவில்லை. அந்தளவுக்கு எதிரணியினர் வங்குரோத்து நிலைக்குள்ளாகியுள்ளனர்.

நாம் 6 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். அதில் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது சமுர்த்தியை வழங்கிவிட்டோம்.

இதேபோன்று காணி உறுதிப்பத்திரத்தைத் பெற்றுக்கொடுத்தல், ஆசிரியர் நியமனம் வழங்குதல், மகா சங்கத்தினருக்கு காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் முதலான அபிவிருத்திப் பணிகள் பலவற்றை முன்னெடுத்துள்ளோம்.

நாங்கள் அபிவிருத்தித் திட்டங்களை வீழ்த்த இடமளிக்கவில்லை. அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களுக்குள் பூரணப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னைய அரசு செய்யவில்லை. முன்னைய அரசைவிட மிகவும் வேகமாக நாங்கள் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மாதிரி இனிமேல் எந்தத் தாக்குதல்களும் இந்த நாட்டில் அரங்கேற நாம் இடமளிக்கமாட்டோம். நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் இன்றி நிம்மதியாக வாழலாம்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியை நாம் அறிந்துவிட்டோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு இருக்கின்றது. அங்கு சென்று எமது சாட்சியங்களை வழங்க மற்றவர்கள் மாதிரி நாங்கள் பயப்படமாட்டோம். மறைக்கப்பட்ட உண்மைகளைத் தெரிவுக்குழு முன்னிலையில் நாம் அம்பலப்படுத்துவோம்” – என்றார்.

காணி மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், கி.துரைரெட்ணசிங்கம், இம்ரான் மஹ்ரூப், சந்தித் சமரசிங்க மற்றும் அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்