ஊழல் அற்ற நாட்டை நேசிக்கும் உண்மையான அரசை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு

ஊழலை ஒழிக்கவே இந்த அரசாங்கம் வந்தது. ஆனால் எதனையும் செய்ய முடியாமல் போயுள்ளது. அதனால் மக்கள் திருடர் பட்டங்களை சுமத்துகின்றனர். இன்னும் 5 மாதங்களில் தேர்தல்களை சந்திக்க போகின்றோம். அதில் ஊழல் அற்ற நாட்டை நேசிக்கும் உண்மையான அரசை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு 15.07.2019 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உண்யைமான அரசியல்வாதி என்பவர் மக்களின் பிரச்சினையை இனம் கண்டு அவற்றை நிவர்த்திக்க வேண்டும். உலக நாடுகளை போன்று ஏன் இலங்கையை மாற்ற முடியாது என சிலர் கேட்கின்றனர். அவ்வாறு செய்ய முடியும்.

அதற்கு ஊழல் தடையாக உள்ளது அரச சேவையே அபிவிருத்தியின் பாரிய சக்தியாகும். நாட்டின் சனத்தொகையில் 8 பேருக்கு ஒரு அரச சேவையாளர் இருகிறார்.

ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளை செய்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும். நாட்டின் வறுமையின் காரணமாகவே பல தொற்று நோய்கள் பரவுகின்றன.

இலங்கையில் 15,000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையோர் சிறைச்சாலைகளில் உள்ளனர். அதேபோல் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களை புனர்வாழ்வுக்குட்படுத்த 11 புனர்வாழ்வு மையங்கள் உள்ளன. தற்போது அவை நிரம்பி வலிகின்றன.

அந்த மையங்களில் உள்ளவர்களை விரைவாக புனர்வாழ்வுக்குட்படுத்துமாறு அவர்களின் பெற்றோர் கேட்கின்றனர். ஆனால் அதனை செய்ய முடியவில்லை. எனவே ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களை புறந்தள்ளி செயற்பட முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்