இன்னும் 5 மாதத்தில் புதிய அரசு அமையும்! – நுவரெலியாவில் கூறினார் மைத்திரி

“எதிர்வரும் ஐந்து மாதங்களில் புதிய அரசை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்குக் கிடைக்கும். இதன்போது தூய்மையான, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட மனிதநேயமிக்க அரசொன்றை உருவாக்குவதற்காக மக்கள் தமது வாக்குப் பலத்தை உபயோகிப்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதாரக் கட்டமைப்பையும் ஊழல், மோசடிகள்மிக்க தூய்மையற்ற அரசியலைக்கொண்ட இந்த நாட்டையும் கட்டியெழுப்புவதற்கான ஒரேயொரு மார்க்கம் உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசு ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாகும். அதற்கான பொறுப்பு நாட்டு மக்களிடமே காணப்படுகின்றது” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். .

நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும் கொண்ட புதிய மாவட்ட வைத்தியசாலையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்றுக் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

“நாட்டை நேசிக்கும் உண்மையான அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை உரியவாறு இனங்கண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.

மேலும் அபிவிருத்தியின் பெரும் பங்காளர்களான சுமார் 16 இலட்சம் அளவிலான அரச சேவையாளர்களும் நாட்டிலுள்ள புத்திஜீவிகளும் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவார்களாயின் நாட்டில் அபிவிருத்தி என்பது ஒரு சவாலான விடயமாக அமையாது.

பெருந்தோட்ட மக்களுக்காக முன்னொருபோதும் நிறைவேற்றப்படாத வேலைத்திட்டங்கள் கடந்த ஐந்து வருடங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்களுக்கான இலவச மருத்துவம், கல்வி மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பல விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டைச் சீரழிப்பதற்கான இலகுவான மார்க்கம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலாகும்.

அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயங்களுக்காகப் பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவற்றின் முழுமையான பலன்களைப் பெற்றுக்கொள்வது மிகச் சிரமமாகும்.

நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் உண்மையான மனிதநேயத்துடன் செயற்பட வேண்டும்” – என்றார்.

நெதர்லாந்து அரசின் இலகு கடனுதவித் திட்டத்தின் கீழ் 7 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலை, 600 கட்டில்களைக் கொண்ட நோயாளர் விடுதி, நவீன தொழிநுட்பத்துடனான சத்திர சிகிச்சைக்கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, மருத்துவக்கூடம், குருதிமாற்று சிகிச்சை நிலையம் மற்றும் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்குமான உத்தியோகபூர்வ இல்லங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராகப் பதவி வகித்தபோது இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அத்துடன், நுவரெலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு உயர் தரத்திலான, பாதுகாப்பான, வினைத்திறனான மருத்துவ சேவைகளை வழங்கவும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய வைத்தியசாலையை மக்களின் பாவனைக்காகக் கையளித்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முதலாவது நோயாளிகள் மூவரையும் பதிவு செய்தார்.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஆளுநர் மைத்ரி குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க, நெதர்லாந்து அரசி ன் விசேட பிரதிநிதிகள் மற்றும் நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரத்ன உள்ளிட்ட பணிக்குழாமினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்