அதிகாரப் பகிர்வின் மூலம் இரு வருடங்களுக்குள் தீர்வு! – யாழ்ப்பாணத்தில் வைத்து உறுதியாகக் கூறினார் பிரதமர் ரணில்

அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்வை இன்னும் இரண்டு வருடங்களுக்கு இடையில் அடைய முடியும் என்று யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

தெல்லிப்பளை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும் நாடாளுமன்றத்தில் தனது ஆட்சிக்குப்  பெரும்பான்மைப் பலம் இல்லாத காரணத்தால் அதனை அடையமுடியாமல் போய்விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இருந்தாலும் தானும் தனது கட்சியும் (ஐக்கிய தேசியக் கட்சி) அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதற்கு அரப்பணிப்போடு துணிந்து நிற்பதாகவும் அவர் கூறினார்.

தமிழர்கள் எதிர்பார்க்கின்ற அதிகாரப் பகிர்வு சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஏனையவர்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை.

தீர்வுக்கு மிக மிக நெருங்கி வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, இன்னும் இரண்டு வருடங்களுக்கு இடையில் தீர்வை அடைந்துவிட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மாகாண மட்டத்திற்கு மட்டுமல்லாது உள்ளூராட்சி சபைகள் வரையில் அதிகாரப் பகிர்வு அமைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் நாம் இலங்கையர்கள் என்று எல்லோரும் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இங்கிலாந்து அணியை அதற்கான உதாரணமாக எடுத்துக்காட்டினார். 10 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிலாந்தில் வந்து குடியேறியவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அவர்கள் அனைவரும் இங்கிலாந்துக்காரர்களாக வரிந்துகொள்ளப்படும் அளவுக்கு இங்கிலாந்தில் ஒருங்கிணைப்பு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அதுபோன்றே இலங்கையிலும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் தாம் இலங்கையர்கள் என்று கூறுவதில் பெருமப்பட்டுக்கொள்ளும் நிலை ஏற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்