சிங்களவர்களுடன் முகத்துக்கு முகம் நின்று தன்மான முரசு கொட்டியவர் அமிர்தலிங்கம்

1956ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்று சட்டம் கொண்டு வரப்பட்ட போது, தமிழ் இளைஞர்கள் ஒருபோதும் அதனை ஏற்க மாட்டார்கள் என்று எதிர்த்து முழங்கியவர் அமிர்தலிங்கம். ‘சிங்கள மொழியை உங்கள் தொண்டைக்குள் திணிப்போம்’ என்று சிங்களவர் வெறியுடன் பேசியபோது ‘அதனை உங்கள் முகத்திலேயே திருப்பித் துப்புவோம் என்று நாடாளுமன்றத்திலேயே முகத்துக்கு முகம் தன்மான முரசு கொட்டியவர் அவர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

அமிர்தலிங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்று வலி.மேற்குப் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் தலைமையுரையாற்றும்போதே சரவணபவன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாறு என்று ஒரு நூல் தொகுக்கப்படுமானால், அதில் அமிர்தலிங்கத்துக்கென்று தனித்ததோர் இடம் இருக்கும். ஈழத்தில் தமிழர்களின் உரிமைக்காக மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குரல்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவுக்குச் சென்று இந்திய ஆட்சியினரின் உயர் மட்டத்திலும் மக்கள் தலைவர்கள் மத்தியிலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் ஈழத்தில் நடக்கும் உண்மைப் போராட்டத்தின் பாங்கை தனது பாணியில், தனக்கே உரித்தான தன்மையுடன் எடுத்துரைத்து ஈழத் தமிழர்களின்  உரிமைப் போராட்டத்தின் நியாயத்தின் பலத்தை நிலைநாட்டினார். அமிர்தலிங்கம் ஈழத் தமிழர்களுக்காக தொண்டு செய்தார் என்பதற்கு அடையாளமே, சிங்கள வெறியர்கள் எந்த அளவுக்கு அவரை வெறுத்தார்கள் என்பதுதான் சரியான அளவுகோலாகும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய ஒருவருக்கு எதிராக ஆளும் கட்சி நம்பிக்கையிலாத் தீர்மானம் கொண்டு வந்தது என்பது உலக ஜனநாயக வரலாற்றில் கேள்விப்படாத ஒன்றாகும். இலங்கையில் அமிர்தலிங்கத்தின் விடயத்தில் இது நடந்தது.

செல்வா வழியில் ஜனநாயக வழிக்கு உட்பட்டு ஈழத் தமிழர்களுக்கான உரிமைகளை ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈட்டிட முடியும் என்ற நம்பிக்கையில் போராடியவர்தான் அமிர்தலிங்கம். தனிஈழம்தான் விடிவு என்ற முடிவுக்குப் பின்னர் வந்தார். 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் தமிழீழப் பகுதியான வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் விடுதலை பெற்ற இறையாண்மையுடன் கூடிய மதச் சார்பற்ற தமிழர் ஈழமே சிங்களவர் – தமிழர் பிரச்சினைக்கு ஒரே நிரந்தரத் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாடு நடந்த ஊர் தான் அமிர்தலிங்கம் பிறந்த பண்ணாகம். கடைசிவரை ஈழத் தமிழர்களுக்காக களத்தில் நின்றார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமிக்க அடிப்படையைக் கொடுத்தவர்களில் அமிர்தலிங்கமும் ஒருவர். தமிழீழக் கோரிக்கையையும் அதைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் முன்வைத்தார். 1977ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் தெளிவாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ விடுதலைக்காக அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் இன்னொருபுறம் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அதன் மூலம் தமிழீழ விடுதலை சாத்தியம் எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.

அந்தக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் வழங்கி பேராதரவின் மூலம் அவர் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிரிவினைக்கு எதிராகச் சட்டம் கொண்டுவந்தபோது தமிழீழ விடுதலைக் கோரிக்கை வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதற்கு தலைமையேற்று வழிநடத்தினார். அதன் காகரணமாக பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைசென்று தமிழ் ஈழக் கோரிக்கையை மக்கள் மயப்படுத்தினார்கள். அதுமட்டுமன்றி 1978ஆம் ஆண்டில் அரசமைப்புக்கு விசுவாசமாக கையெழுத்து வைக்க மறுத்து நாடாளுமன்றப் பதவிகளைத் துறந்தனர். இந்த நடவடிக்கையானது உலக அரங்கில் தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்தும் ஆழமான முன்னெடுப்பாக அமைந்தது. தொடர்ந்தும் அமிர்தலிங்கம் தமிழீழ விடுதலைக்காக தன்னாலான அர்ப்பணிப்புக்களை வழங்கினர். இதன்காரணமாக இலங்கையில் உயிர் ஆபத்தான நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தது. எனவே இலங்கையில் இருந்து சென்று இந்தியாவில் வாழ வேண்டிய துரதிஷ்டமான நிலைமை ஏற்பட்டது.

அங்கிருந்து கூட இந்திராகாந்தியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பார்த்தசாரதி மூலம் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகளை பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பிடிவாதமான பேரினவாதப் போக்கால் அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்தன. அதனால் அவரின் அர்ப்பணிப்பு தமிழ் மக்கள் உரிமைக்களுக்கான செயற்பாடுகள் அர்த்தமற்றவையாக்கப்பட்டன. எனினும்கூட அவர் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த காலம் தொட்டு சாவு வரை அவரும் அவருடைய பாரியார் மங்கையர்க்கரசி அம்மையாரும் தமிழ் மக்களின் நலன்களுக்காக தியாக மனப்பான்மையுடன் சேவை செய்தனர் என்பதை எவரும் மறந்துவிட முடியாது. என்றும் அவருடைய நாமம் தமிழ் மக்கள் மத்தியில் உறுதியாக நிலை பெற்றிருக்கும் என்பதை தெளிவாகவே கூறிவைக்க விரும்புகிறேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்