தேர்தலுக்காகவே ரிசாட்டை பாதுகாக்கிறார் பிரதமர்: ரத்தன தேரர்

எதிர்வரும் தேர்தலினை கருத்திற்கொண்டே முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாக்கின்றாரென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்

சிலாபம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரத்தன தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “இரண்டு மாத கால விசாரணையின் ஊடாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், எந்த குற்றமும் புரியவில்லையென்று தீர்ப்பு வழங்க முடியுமென்றால், அதனை விசாரணை செய்த பொலிஸார் எத்தகைய புதுமையானவர்களாக இருக்க முடியும்.

சதொச முறைக்கேடு, வாகன முறைக்கேடு, இட பறிமுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவைகள் அனைத்தும் பொய்யென கூறி முடிவுக்கு கொண்டுவரப்படுமாயின் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லையென்றே கூற வேண்டும்.

இன்று ரிசாட்டை பாதுகாப்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஆகும். இதற்கு காரணம், தேர்தலில் அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வற்கேயாகும்

அந்தவகையில் ரணிலிடம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ரிசாட்டுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டால், ஐக்கிய தேசியக் கட்சியின் 10 இலட்சம் வாக்குகளை இழக்க நேரிடும்” என அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்