ஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்கள் முதலமைச்சர் தலையிட வைகோ வேண்டுகோள்

ஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்கள்
முதலமைச்சர் தலையிட வைகோ வேண்டுகோள்

தமிழ்நாட்டில் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வரத்துத் தடங்ளைத்
தூர் வாருவதற்காக குடிமராமத்துத் திட்டங்கள் துவக்கப்பட்டபோது, விவசாயிகள் இதனை
வரவேற்றனர். தமிழக அரசு குடிமராமத்துப் பணிகளுக்காக 2016-17 ஆம் ஆண்டு முதல் கட்டமாக
ரூ.100 கோடி ஒதுக்கி, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள 1519
குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர் வாரும் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தது.
2017-18 ஆம் ஆண்டில் 29 மாவட்டங்களில் 331.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 65
பணிகள் மேற்கொள்ளத் திட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நடப்பு 2018-19 ஆம் ஆண்டில் 29 மாவட்டங்களில் உள்ள 1829 நீர்நிலைகளை நான்கு
மண்டலங்களாகப் பிரித்து, குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் புனரமைக்க ரூபாய் 499.68 கோடி
ஒதுக்கீடு செய்து, கடந்த ஜூன் 14 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி சென்னை மண்டலத்தில் உள்ள 277 நீர்நிலைகளைத் தூர்வார ரூ.93 கோடியும், திருச்சி
மண்டலத்தில் உள்ள 543 நீர்நிலைகளைப் புனரமைக்க 109 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம்
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் 681 நீர்நிலைகள் ரூ.230 கோடி மதிப்பீட்டிலும்,
கோவை மண்டலத்தில் 328 நீர் நிலைகள் 66 கோடியே 80 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்
மதிப்பீட்டிலும் புனரமைக்கத் திட்டமிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசால் நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்கவும், நீர்ப்பாசன வழித்தடங்களைப்
புனரமைக்கவும், செயல்படுத்தப்படும் குடிமராமத்துத் திட்டம் வரவேற்புக்கும், பாராட்டுக்கும்
உரியதாகும்.

ஆனால் குடிமராமத்துத் திட்டத்தின் நோக்கம் பயனின்றி, ஊழலும், முறைகேடுகளும்
தொடர்வதும், அதனை அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருவதும் வேதனை தருகிறது.
இந்தக் குடிமராமத்துப் பணிகள் நீர்வள ஆதாரத் துறையினரால் திட்டமிடப்பட்டு விவசாய
சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் சங்கங்கள் மூலமாக செயல்படுத்த வழிகாட்டு
நெறிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

இது தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து, சங்கங்களை ஏற்படுத்தி
குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான விதிமுறைகள் மாவட்ட
ஆட்சியர்கள் மூலமாக வகுக்கப்பட்டு, முறையாக பணிகள் நடைபெற வேண்டும் எனவும் அரசின்
சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

குடிமராமத்துப் பணிகள், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 மற்றும் அதன் விதிகளின்படி
அசல் ஆயக்கட்டுத்தாரர்களால்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசாணையில்
தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நேற்று சட்டமன்றத்திலும் இதுகுறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், வழிகாட்டுதல்
நெறிமுறைகளைத் தெரிவித்து உள்ளார்.

ஆனால் இந்த விதிமுறைகளை எல்லாம் வீசி எறிந்துவிட்டு, உள்ளூர் விவசாயிகள்,
ஆயக்கட்டுதாரர்கள் இல்லாமல், ஆளும் கட்சியினர் தலையீட்டில் பல போலி சங்கங்கள்
உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் குடிமராமத்துத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த
முறைகேடுகளால் நீர் நிலைகள் முறையாகத் தூர் வாரப்படாமல், மக்கள் வரிப்பணம் கொள்ளை
அடிக்கப்படுவதுடன், குடிமராமத்துத் திட்டத்தின் நோக்கமும் சிதைகிறது.

ஆளும் கட்சியினரின் குடிமராமத்து ஊழல்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் விவசாய
சங்கங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்தவண்ணம் இருக்கின்றனர்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் – நல்லூர் குட்டப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட
பாப்பன்குளம், 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தக் குளம் மூலம் 300 ஏக்கர் பாசன வசதி
பெறுகிறது. கடந்த 2017-18 இல் இந்தக் குளத்தில் 3 கட்டமாக சீரமைப்புப் பணிகள்
நடந்துள்ளதாக அங்கு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல இலட்சங்கள்
செலவிடப் பட்டதாகவும் அதில் குறிக்கப்பட்டுள்ளது. பாப்பான்குளத்தில் தூர்வாரும் பணி,
கரையை பலப்படுத்தும் பணி, மதகுகள் சீரமைப்பு உள்ளிட்ட எந்தப் பணியும் நடைபெறவில்லை.
ஆனால் தூர் வாரி செப்பனிட்டு விட்டதாக நீர்ப்பாசனத்துறையினர் அறிவிப்பு செய்துள்ளதைக்
கண்டித்து ஜூலை 15 ஆம் தேதி விவசாயிகள் பாப்பன்குளத்தில் இறங்கி உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் – கொண்டங்கி ஏரியைத் தூர்வார ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளைச் செய்ய ஆளும் கட்சியினர் போலி சங்கத்தைத்
தொடங்கி, குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முயற்சிப்பதைத் தடுக்க வேண்டும் என்று
விவசாயிகளும், பொதுமக்களும் விழுப்புரம் ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அதே போல 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட சங்கராபுரம் ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கி 20
ஏக்கராக ஆகியுள்ள நிலையில், அங்கும் தூர்வாருவதற்கு ஆளும் கட்சியினர் போலி சங்கத்தை
ஏற்படுத்தி உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ரூ. 8.15 கோடி மதிப்பில் பாசன வாய்க்கால் மற்றும் நான்கு ஏரிகளைத்
தூர்வார மாவட்ட ஆட்சியரிடம் ஆளும் கட்சியினர் போலி சங்கத்திற்குப் பணிகள் ஒதுக்கீடு
செய்யக் கோரி நிர்பந்திக்கின்றனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தின் பாசன ஆதாரமான பெருமாள்
ஏரியும் முறையாகத் தூர்வாரப்படாமல், குடிமராமத்துப் பணிகள் பெயரளவுக்குத்தான் கடந்த
ஆண்டு நடந்தன.

வடலூர் ஐயன் ஏரியை சில நிறுவனங்கள் தத்தெடுத்து சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ்
தூர்வாரி கரையைப் பலப்படுத்தியுள்ளன. ஆனால் அதே ஏரியைத் தற்போது சேராக்குப்பம் ஐயன்
ஏரி என்று பெயர் மாற்றிக் குறிப்பிட்டு, கரையைப் பலப்படுத்த நிதி ஒதுக்கீடு பெற்று, மக்கள்
வரிப்பணத்தை ஏப்பமிட முயற்சி நடக்கிறது.

கடலூர் மாவட்டம் – புவனகிரி தொகுதியில் உள்ள பின்னலூரில் நூற்றாண்டு பழமையான
சூடாமணி ஏரி உள்ளது. இரண்டு கிலோ மீட்டர் நீளமும், முப்பது ஏக்கர் பரப்பளவும் கொண்ட

இந்த ஏரி, சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன ஆதாரமாக இருக்கின்றது. இதையும்
முறையாக ஆழப்படுத்தி தூர்வாராமல், குடிமராமத்துப் பணி பெயரளவுக்கு நடப்பதாக விவசாய
சங்கங்கள் புகார் கூறி உள்ளன.

குடிமராமத்துத் திட்டங்களில் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஆளும் கட்சியினர் உண்மையான
ஆயக்கட்டுத்தாரர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொண்ட சங்கங்கள் நீர் நிலைகளை
தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால் ‘கமிஷன்’ கேட்டுத் தொல்லைப்படுத்துகின்றனர் என்றும்
விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று குடிமராமத்துத் திட்டத்தில் நடைபெறும்
ஊழல்களுக்கு கடலூர், விழுப்புரம், திருச்சி மாவட்டத்தின் நிலையை படம்பிடித்துக் காட்டி
இருக்கின்றேன். தமிழ்நாடு முழுவதும் இதே நிலை இருப்பதால் குடிமராமத்துத் திட்டம்
தோல்வியைத் தழுவிவிடும் நிலையும், வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள தமிழகம் அதிலிருந்து மீள
முடியாத ஆபத்தும் நேரிடும். எனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
குடிமராமத்துத் திட்டத்தின் முறைகேடுகளைக் களைந்து, செம்மைப்படுத்தி
செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று
வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை – 8                                                                                                                                                                                                                                                                    பொதுச்செயலாளர்,
16.07.2019                                                                                                                                                                                                                                                                                                   மறுமலர்ச்சி தி.மு.க.,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்