பிரேரணையை ஆதரிக்குமாறு ஜே.வி.பியினர் கேட்கவில்லை! – மஹிந்த குற்றச்சாட்டு

அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணி கேட்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசின் செயற்பாட்டின் மீது எமக்கு விருப்பமில்லாத காரணத்தினாலேயே நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

எங்களிடம் வந்து ஆதரவைப் பெற்றுக்கொள்ள மக்கள் விடுதலை முன்ணிணிக்கு தெரிந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் ஒருபோதும் எம்மிடம் வந்து கேட்கவில்லை.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், பிரதமர் ரணிலை இரவில் சென்று சந்திப்பதுடன் அவருடனேயே உறங்குகின்றனர். எம்மிடம் ஒன்றாக இணைந்து எதனையும் அவர்கள் செய்யவில்லை.

தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு யானையல்ல புலியைக் கூடக் கொடுப்பார்கள். ஆனால், மக்கள் ஒருபோதும் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

நாட்டு மக்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு ஆட்சியாளர்கள் அனைவர் பற்றியும் நன்கு தெரியும். 2015இல் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்பதுடன் சாப்பாட்டுக்கூட கஷ்டப்படும் நிலைமையை மக்களுக்கு உருவாக்கியுள்ளனர்.

அதுமட்டுமன்றி மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்குக் கூட அச்சமின்றி செல்ல முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்