ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்பு!

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு மாணவிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய மாணவியைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றுப் பிற்பகல் அளவில் பாடசாலையிலிருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்றபோது இரண்டு மாணவிகள் ஆற்று நீரினால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

டொரிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மதியழகன் லக்ஸ்மி (வயது 12), மதியழகன் சங்கீதா (வயது 10) ஆகிய மாணவிகளே ஆற்று நீரினால் இழுத்துச் செல்லப்பட்டவர்களாவர்.

தேடுதல் நடவடிக்கையின்போது லக்ஸ்மி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் சடலம் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன சங்கீதாவைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

வழமையாக இந்த ஆற்றைக் கடந்தே டொரிங்டன் தோட்ட மாணவ, மாணவிகள் பாடசாலைக்குச் சென்று வருவது வழக்கம். எனினும், அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக குறித்த ஆற்றில் வழமைக்கு மாறாக அதிக நீர் பெருக்கெடுத்தபோதே மாணவிகள் இருவரும் அதில் அகப்பட்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்