உரிமைப் பிரச்சினைகளில் இனித் தலையிடமாட்டேன்

“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவைப் பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் இனித் தலையிடேன். உரிமைக் கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை வடக்கு, கிழக்கின் மக்கள்  பிரதிநிதிகள் எழுத்து மூலமாகக் கோருவார்களாயின் அவை பற்றி பரிசீலிப்பேன்.”

– இவ்வாறு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

“நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் மற்றும் ஏனைய சில கட்சிகளின் தமிழ் எம்.பிக்கள் கலந்துகொள்ளாமையைப் பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பில் எனக்கு எவர் மீதும் கோபம் கிடையாது. அனைவராலும் கலந்துகொள்ள முடியாமை பற்றி நான் எனது கவலையை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் கேள்விக்குப் பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி தலைமையில் நேற்று உண்மையில் முற்பகல் 11.30 க்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டத்தை, அரை மணித்தியாலம் தாமதித்து 12 மணிக்கே ஆரம்பித்தோம். எனது வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி தமது அறையில் காத்திருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் எம்.பிக்கள் வருவார்கள் என நாம் காத்திருந்தோம். என்னுடன், அமைச்சர் பழனி திகாம்பரம், எம்.பிக்களான திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

குறைந்தபட்சமாக இன்னொரு சகோதர சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றுகூடுவதை நினைத்து நாம் மகிழ்வோம். ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டம், அவசர பிரச்சினை தொடர்பில் நடைபெற்ற அவசர கூட்டம். அனைவருக்கும் ஏதோ ஒரு முறையில் அவசர அழைப்பு தகவல் அனுப்பப்பட்டது; பரிமாறப்பட்டது; ஊடகங்களிலும் கூறப்பட்டது.

எம்.பிக்களான சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொள்ள இயலாமை தொடர்பில் தகவல் தெரிவித்திருந்தார்கள். அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பிக்களான அ.அரவிந்குமார், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் நாட்டில் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. முத்து சிவலிங்கம் எம்.பி. சுகவீனம் எனக் கூறப்பட்டது. சுவாமிநாதன் எம்.பியைத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஏனையோர் பணிப்பளு காரணமாக கலந்துகொள்ளவில்லை என எண்ணுகின்றேன்.

எது எப்படி இருந்தாலும், எனது அமைச்சின், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார பணிகள் தொடர்பான அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவைப் பத்திரங்கள் ஆகிய மட்டங்களில் எனது பணி வடக்கு, கிழக்கில் தொடரும். இவை பற்றி நானே முடிவு செய்வேன்.

இவை தவிர்ந்த வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில், வடக்கு, கிழக்கின் மக்கள்  பிரதிநிதிகள் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன்வைப்பார்கள் எனில் அவற்றை நான் பரிசீலிப்பேன்.

மூன்று வருடங்களுக்கு முன்னேரே, முதற்கட்டமாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தமிழ் நாடாளுமன்ற ஒன்றியம் ஒன்றை அமைக்க வேண்டும், பின் அது தமிழ் பேசும் நாடாளுமன்ற ஒன்றியமாக விரிவுபடுத்தப்பட்ட வேண்டும் என நான் பகிரங்கமாக யோசனை கூறி இருந்தேன்.

இந்த ஒன்றியம் கட்சி, தேர்தல், பிரதேச பேதங்களுக்கு அப்பால் எமது பொதுவான பிரச்சினைகளை அரசு, சிங்களக் கட்சிகள், பெளத்த தலைமைகள், சர்வதேச சமூகம் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறியிருந்தேன்.

புதிய அரசமைப்பு என்பது நடைமுறையில் வராது. அதற்கான அரசியல் திடம் இங்கே இல்லை என இந்த அரசில் இருந்துகொண்டே கூறியிருந்தேன். இவை இன்று உண்மைகளாகி விட்டன. எனினும், இவற்றுக்கு இன்று காலம் கடந்துவிட்டது. விரைவில், ஏதாவது அதிசயம் நடந்து, தந்தை செல்வா சொன்னது போன்று கடவுள் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என நம்புகின்றேன்” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்