புதிய கூட்டணி – அனந்திக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் சந்திப்பு

தமிழர் அரசியலில் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணி குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருவதோடு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணிக்கான பேச்சுவார்த்தைகள் குழப்பங்களை தோற்றுவித்திருக்கும் நிலையில் இச்சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

கூட்டமைப்பிற்கு மாற்றாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அனந்தி சசிதரன் மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தலைமையிலான கட்சி அல்லது அமைப்புக்களும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக பரவலாக பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதலமைச்சரின் புதிய மாற்று அணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியை இணைத்துக்கொள்ளக் கூடாதென்றும் அவ்வாறு அந்தக் கட்சியை இணைத்துக்கொண்டால் தாம் அந்தக் கூட்டுக்கு வரப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது.

இதனால் புதிய அணி அமைப்பது தொடர்பான பேச்சுக்கள் பெரும் இழுபறிகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருந்தன.

இவ்வாறானதொரு நிலைமையிலையே சுயாட்சிக் கழகத்திற்கும் மக்கள் முன்னனிக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்