தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் – பேராயர் மீண்டும் வலியுறுத்தல்!

அரசாங்கம் உடனடியாக பதவி விலகி நாட்டை ஆட்சி செய்யக்கூடியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தை மீள திறக்கும் நிகழ்வு நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று திருப்பலி ஒப்புக்கொடுத்து அங்கு உரையாற்றிய போதே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூறத் தேவையில்லை.

இது நாட்டினுள் கலவரம் ஒன்றை ஏற்படுத்த சர்வதேச நாடுகளின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வழிதவறிச் சென்ற இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்.

நாட்டின் தலைவர்கள் சர்வதேச சக்திகளுக்கு தேவையான முறையில் நடந்து கொள்கின்றனர். வளமிக்க நாட்டை மேலும் சக்திமிக்கதாக மாற்ற அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மிகவும் பலம் வாய்ந்த புலனாய்வு பிரிவை தற்போதைய அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ளது.

மாவனெல்ல புத்தர் சிலை தாக்குதலின் போது தகவல் வழங்கிய நபர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கானார். குற்றவாளிகளை விடுதலை செய்து அனைத்து அரசியல் தலைவர்களும் இதனை மூடி மறைத்தனர்.

தற்போதைய தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. இந்த சம்பவங்களுக்கு காரணமான அரசாங்கம் உடனடியாக விலகி ஆட்சி செய்யக்கூடியவர்களுக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்