நல்லாட்சி நீடித்தால் ஒவ்வொரு நொடியும் நாடு வீழ்ச்சி அடையும்: ரத்தன தேரர்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபுரிகின்ற ஓவ்வொரு நொடியும் நாடு வீழ்ச்சி பாதையை நோக்கியே நகர்ந்து செல்லுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

பிலியந்தலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரத்தன தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்தவினால் நடத்தப்பட்ட ஆட்சி சிறந்த ஆட்சியென்று கூற முடியாது. அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சூதாட்டங்கள், அமைச்சர் ரிசாட்டின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தடுக்கப்படவில்லை.

ஆகையால்தான் நாடு இன்று பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து சீரழிந்து காணப்படுகின்றது.

இதேவேளை ஜே.வி.பி.யினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் பல சிக்கல்கள் உள்ளன. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் பிரதமருக்கு எதிராக செயற்படக்கூடாது, ஆனால் அவரது கொள்கைகளை எதிர்க்க வேண்டும்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் நாட்டை வீழ்ச்சி பாதை நோக்கியே கொண்டு செல்கின்றன. ஆகையால் தேர்தல் ஒன்றினை நடத்துவது மிகவும் அவசியமாகும்.

அத்துடன் தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாக மக்களின் அபிப்பிராயங்களை வெளிக்கொண்டுவர முடியும்” என ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்