ஹேமசிறி பெர்னாண்டோ- பூஜித் ஜயசுந்தர நீதிமன்றத்தில் முன்னிலை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விசாரணைகளுக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இருவரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபரினால், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதற்கமைவாக சம்பவம் தொடர்பாக சாட்சியமளிப்பதற்காக, கடந்த ஜுலை 02 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நாரஹென்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்பின்னர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த தினத்திலேயே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரையும் 9 ஆம் திகதி தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே ஹேமசிறி பெர்னாண்டோ- பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்