கந்தப்பளை இந்து ஆலய முன்றலில் விகாரை அமைக்க முடியாது – தீர்மானம் நிறைவேறியது

நுவரெலியா, கந்தப்பளை – கோர்ட் லோஜ் முனுசாமி ஆலய முன்றலில் புத்த விகாரை அமைப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் இது தொடர்பான தீர்மானத்தை சபையில் முன்வைத்திருந்தார்.

இதற்கு அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் வழிமொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கந்தப்பளை பொலிஸார், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என உறுதியளித்துள்ளனர்.

நுவரெலியா கந்தப்பளை கோர்ட்லொஜ் தோட்டப்பகுதியிலுள்ள இந்து ஆலயத்தில் பௌத்த மதகுரு ஒருவர், பௌத்த கொடியை நாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதற்கு மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கன்னியா மற்றும் நீராவியடி விவகாரத்துடன், இவ்விவகாரமும் பேசப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் விகாரை அமைப்பதற்கு தடை விதிக்கும் விதமாக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்