தென்கயிலை ஆதீனம் மீதான தாக்குதல் வழக்கின்போது கவனத்தில் எடுக்கப்படும்!

திருகோணமலை, கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் விகாரை அமைக்கும்  பணிகளைத் தடுப்பதற்காக சாத்வீக ரீதியில் எதிர்ப்புத் தெரிவித்த தென் கயிலை ஆதீனத்தைச் சேர்ந்த அகத்தியர் அடிகளார், கன்னியா பிள்ளையார் ஆலய உரிமையாளர் கோகில ரமணி அம்மையார் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட அநாகரிகச் செயற்பாடுகள் தொடர்பில் வழக்கு விசாரணைகளின்போது கவனத்தில் கொள்ளப்படும்.

– இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

தமிழர்களின் பாரம்பரிய பூமியாகிய கன்னியாவில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைப்பது தொடர்பில் ஆலய உரிமையாளரான ரமணி அம்மாவின் கோரிக்கைக்கு அமைவாக அவரை பிரதான மனுதாரராகக் கொண்ட வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று ஆஜராகி வாதாடி இடைக்காலத் தடை உத்தரவை பெற்றுக்கொடுத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு;-

இந்து பக்தர்கள் தலைமுறை தலைமுறையாக ஆயிரம் ஆண்டுகளாக செய்துவந்த கடமைகளை தொல்பொருள் திணைக்களம் தடுக்கின்றது என்ற முறைப்பாடு திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் பிள்ளையார் ஆலய உரிமையாளர் ரமணி அம்மாவால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக எழுத்தாணைகள் வழங்குகின்ற அதிகாரம் மாகாண மேல்நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. காணி அதிகாரம் மாகாணசபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே காணி பிணக்குத் தொடர்பாக எவரையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தை மேல் நீதிமன்றம் வழங்க முடியும்.

ஆகவே, இன்றைக்கு திருகோணமலை மேல்நீதிமன்றம் எங்களுடைய எழுத்தானை மனுவைப் பரிசீலித்து, நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்டதாகக் கருதி, இந்த வழக்கு சம்பந்தமாக எதிர்மனுதாரருக்கு நாங்கள் கொடுத்த அறிவித்தல் முறையே சேர்ப்பிக்கப்பட்டது என்பதையும் உறுதி செய்து, இந்த இடைக்காலத் தடை உத்தரவு நாங்கள் கேட்டவற்றில் ஐந்தில் நான்கை இன்றைக்கு வழங்கியிருக்கின்றது.

இந்தத் தடை உத்தரவுகளில், பிள்ளையார் கோவிலை மீளக் கட்டுவதை எவரும் தடுக்கக்கூடாது என்ற உத்தரவை மட்டும் நீதிமன்றம் வழங்கவில்லை. அது சம்பந்தமாக தொல்பொருள் திணைக்களம் வர்த்தமாணிப் பிரசுரம் ஒன்றைச் செய்திருப்பதன் காரணமாக அதுதொடர்பாக இந்த வழக்கின் இடையிலே அல்லது முடிவிலே இரு தரப்பினரையும் விசாரித்து ஒரு தீர்ப்பு கொடுப்பதாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. மிக முக்கிய விடயங்களான மற்றைய நான்கிற்கும் இடைக்காலத் தடை உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நீதிமன்றக் கட்டளைகளையும் நீதிமன்றப் பதிவாளர் ஊடாக அனுப்புகின்ற அறிவித்தலையும் எதிர்மனுதாரர்கள் இருவருக்கும் அனுப்பி, அவர்கள் நீதிமன்றத்திலே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி சமுகமளிக்குமாறு அழைப்பாணையும் அனுப்பப்பட்டிருக்கின்றது.

இதில் நாம் முன்வைத்த ஒரு கோரிக்கை, இந்த வெண்ணீர் ஊற்றுக்களிலேதான் இந்துக்கள் இறந்த தம் மூதாதையர்களுடைய ஞாபகார்த்தமாகப் பிதிர் கடமைகளைச் செய்துவருகின்றமை வழக்கம். அதிலேயும் விசேடமாக ஆடி அமாவாசையன்று இதனை தந்தையை இழந்த அனைவரும் செய்கின்றமை வழக்கம். எனவே, வருகின்ற 31 ஆம் திகதி இந்து பக்தர்கள்  ஆடி அமாவாசையன்று பிதிர்க்கடன் செலுத்த அங்கு செல்லத் தடுப்பார்கள். அப்படி தடுக்கக்கூடாது என்று தடை உத்தரவு இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் வருகின்ற ஆடி அமாவாசையில் எவ்வித தடையுமின்றி தமது பிதிர்க்கடன்களை ஆற்றலாம். முழு இந்து சமூகத்துக்குமாக ரமணி அம்மையார் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

தென்கயிலை ஆதீனம், ரமணி அம்மா ஆகியோர் மீதான தாக்குதலையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்து மக்கள் அனைவர் மனங்களையும் இந்த விடயம் புண்படுத்தியுள்ளது. ஆதீனம் தற்போது இங்கு இல்லை. நான் இன்று காலையும் அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அவர் மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார். இன்று வருவேன் என்று சொல்லியிருக்கின்றார். இவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாகவும் இ.ந்த வழக்கின்போது கவனத்தில் எடுக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்