சிங்கள பௌத்த இரத்தம் உடலில் ஓடும் முதுகெலும்புள்ளவன் நான்!

– பேராயருக்கு மைத்திரி பதிலடி

“சிங்கள பெற்றோரின் வளர்ப்பில் சிங்கள பௌத்த இரத்தம் கொண்டவன் நான். முதுகெலும்புள்ள அரசியல்வாதி நான். என்னிடம் பேசவேண்டுமானால் நேரடியாகப் பேசுங்கள். பின்னால் இருந்து பேச வேண்டாம். எனக்கு முதுகெலும்புள்ளது என்பதைப் பல தடவைகள் நிரூபித்துள்ளேன். அதைவிடுத்து, அரசியல் காரணங்களை வைத்துக்கொண்டு பேச வேண்டாம்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ‘சத்விரு அபிமன் 2019’ – இராணுவத்தினருக்கு நலன்புரி நன்மைகளை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஏகடந்த ப்ரல் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதலுக்கு மூன்று மாத காலம் நிறைவுற்ற நேற்று நீர்கொழும்பில் உரையாற்றிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, முதுகெலும்பற்ற அரசியல் தலைவர்கள் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில், இன்று ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை, பேராயரைத் தாக்கிப் பேசும் விதமாகவே இருந்தது.

ஜனாதிபதி தனது உரையின்போது மேலும் தெரிவித்ததாவது:-

“ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன்.

இந்தத் தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசு தனது அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றியுள்ளது. அத்துடன், தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பை இலங்கையிலிருந்து அரசு ஒழித்தது. அதுமாத்திரமன்றி, தாக்குதல் இடம்பெறுவதற்கு ஏதுவாக அமைந்த சகல விடயங்கள் தொடர்பாகவும் தற்போது பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்று சகல தரப்பினரிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

முக்கியமான இரண்டு அதிகாரிகள் தமது கடமையைச் சரியாகச் செய்யவில்லை. அதனால்தான் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தைத் தடுக்க முடியாமல் போனது. இது எல்லோருக்கும் தெரியும்.

நான் எதையும் மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய தேவை எனக்கில்லை. என்னை வீட்டுக்குப் போகுமாறு எவரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டுக்குப் போவேன். தேவையானால் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன்.

நான் அனைத்து மதங்களையும் மதிக்கும் ஒரு தலைவர் என்ற வகையில் அனைத்து மதத் தலைவர்களையும் போற்றுகின்றேன். ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் யாராக இருப்பினும் அவை தொடர்பில் என்னுடன் வெளிப்படையாக – நேரடியாகக் கலந்துரையாட முடியும். தேவையேற்படின் ஊடகங்களுக்கு முன்னாலும் அதனை மேற்கொள்ள முடியும். அதுவும் இல்லையெனில் எனக்கு எதிராக நீதிமன்றத்துக்கும் அவர்கள் செல்ல முடியும்.

எனக்கு நல்ல முதுகெலும்பு உள்ளது. சிங்களப் பெற்றோரின் வளர்ப்பில் சிங்கள பௌத்த இரத்தம் கொண்டவன் நான். இந்தநிலையில், என்னை முதுகெலும்பற்ற ஒரு தலைவராகச் சுட்டிக்காட்ட சிலர் முயற்சிக்கின்றார்கள்.

நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் என்பதை 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போதும் அதன் பின்னரும் பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளேன்.

கடந்த அரசைப் போன்றே தற்போதுள்ள அரசிலும் இடம்பெறும் ஊழல், மோசடிகளைக் கண்டறிவதற்கு முதுகெலும்புடைய ஒரு தலைவர் என்பதனாலேயே ஆணைக்குழுக்களை நியமிக்க நான் நடவடிக்கை எடுத்தேன். கடத்தல்காரர்கள், பாதாள உலகக் கோஷ்டியினர், குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுடன் போராடுவதற்கும் எனக்குள்ள முதுகெலும்பே காரணமாகும்.

முதுகெலும்புடைய தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியது விமர்சனங்களை முன்வைப்பது அன்றி கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும்.

அதைவிடுத்து, அரசியல் காரணங்களை வைத்துக்கொண்டு எனக்கு முதுகெலும்பில்லை என்று கூறுபவர்கள் கடந்த காலத் தலைவர்களை இப்படி விமர்சித்திருப்பார்களா? அப்படிச் செய்திருந்தால் வீடு வாசல் இல்லாமல் போயிருக்கும். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த தலைவன் என்றபடியால் என்னைக் கண்டபடி விமர்சிக்கின்றனர்.

விமர்சனங்கள் தேவையானவை என்ற போதிலும் அவை நாட்டையும் மக்களையும் தவறான வழியில் இட்டுச் செல்லக்கூடிய, அரசை அசௌகரியங்களுக்கு உட்படுத்தக்கூடிய பாரதூரமான விமர்சனங்களாக அமையக்கூடாது.

இன்று இந்த விமர்சனங்களை முன்வைக்கும் சகலரும் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் எமது வீரமிக்க இராணுவத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையினரும் தமது உயிரைத் துச்சமாக மதித்து நிறைவேற்றிய உன்னத மனித நேய செயற்பணிகளையே காட்டிக்கொடுக்கின்றனர்.

மேலும், ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அன்று போலவே இன்றும் நான் வேதனை அடைகின்றேன். அந்த வேதனையை ஒருபோதும் மறக்க முடியாது” – என்றார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படைத் தளபதிகள், பதில் கடமை பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்