மனோவின் வாக்குறுதியை அடுத்து முடிவுக்கு வந்தது அரசியல் கைதியின் உண்ணாவிரதம்!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சர் மனோ கணேசன், இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்து உறுதிமொழி வழங்கியதை அடுத்து அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்துகொண்டுள்ளார்.

இதன்போது அமைச்சர் மனோ கணேசனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோடிஸ்வரன் ஆகியோரும் மேல்மாகாண சபை உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் விஷ்ணுகாந்தன் ஆகியோரும் அங்கு சென்று அவரை சந்தித்தனர்.

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கனகசபை தேவதாசன் என்ற 62 வயதுடைய நெல்லியடியைச் சேர்ந்த குறித்த தமிழ் அரசியல் கைதி, கடந்த 15ஆம் திகதி முதல் புதிய மகசின் சிறைச்சாலைக்குள் நீராகரம் அருந்தாமல் சாகும்வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தனக்கு பிணை வழங்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

கோட்டை புகையிரத நிலையம் குண்டுவெடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும் மற்றொரு வழக்கில் 20 வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு வழக்குகளிலும் இவரே தனக்காக வாதாடியிருந்தார். தனது வழக்கில் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் முன்வைப்பதற்காக தனக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தே அவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்