தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவது குறித்து ஜனாதிபதியிடம் வினவத் தீர்மானம்!

தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கவுள்ளார்.

இந்நிலையில் அதன்பின்னர் ஜனாதிபதியால் முன்னிலையாக முடியுமா? என்பது தொடர்பாக அவரிடம் வினவப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளை (புதன்கிழமை) மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது அரச புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி சிரேஷ் பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் பிரதி மா அதிபர் ரவி செனெவிரத்ன மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சானி அபேசேகர ஆகியோர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த தெரிவுக்குழுவில் உயர் பதவியில் உள்ள பலர் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளனர். அவர்கள் வழங்கிய சாட்சியங்களின் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.

எனினும் குறித்த குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, ஜனாதிபதியையும்  சாட்சியம் வழங்குவதற்காக அழைப்பது தொடர்பாக அவரிடம் வினவப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்