விக்கி எதிர் டெனீஸ் வழக்கு: ஓகஸ்ட் 5ஆம் திகதி தீர்ப்பு!

தம்மை வடக்கு மாகாண சபையின் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கிய முறைமை தவறு எனத் தெரிவித்து வடக்கு மாகாண முதலமைச்சராகவிருந்த சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த வழக்கின் மீதான விசாரணைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பூர்த்தி செய்தது. தீர்ப்பு எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நீதியரசர் மஹிந்த சமயவர்த்தன, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட ஆயத்தின் முன்னாலேயே நேற்று விசாரணைகள் பூர்த்தியடைந்தன.

நேற்று எதிர்மனுதாரரான சி.வி.விக்னேஸ்வரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் சுமார் இரண்டரை மணிநேரம் வாதிட்டார். தொடர்ந்து மனுதாரர் டெனீஸ்வரன் சார்பில் அவரின் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ தமது பதில் வாதங்களை முன்வைத்தார்.

அதனையடுத்து தீர்ப்புக்காக வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பின் பின்னர் இந்த வழக்கில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவை நிறைவேற்றத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை விக்னேஸ்வரனும் ஏனைய இரு எதிர் மனுதாரர்களும் அவமதித்தனர் என்று தெரிவித்து டெனீஸ்வரனால் தொடரப்பட்ட மற்றைய வழக்கின் மீதான விசாரணை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்