அமெரிக்காவின் வருகைக்கு அனுமதியளிக்கும் உரிமை இலங்கையிடமே – அலெய்னா

இலங்கைக்குள், அமெரிக்காவின் இராணுவம், கப்பல்கள் மற்றும் விமானங்களின் நுழைவுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை இலங்கையிடம் மட்டுமே உள்ளதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் (Alaina Teplitz) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதால் அது நாட்டுக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்று எதிரணியினர் விமர்சித்து வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அந்தவகையில், இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்துகொள்ள அமெரிக்கா விரும்புகிறதே ஒழிய, இங்கு இராணுவத்தளத்தை அமைக்கும் எண்ணம் ஏதும் கிடையாது எனவும் அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இங்கு வரும் அமெரிக்க இராணுவத்தினர், தொடர்பான வரையறைகளை உருவாக்கும் நோக்கிலேயே இந்த உடன்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து இன்னமும் இரண்டு நாடுகளும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே உள்ள உடன்பாட்டை புதுப்பித்துக்கொள்ளவே இந்த புதிய உடன்பாடு செய்துகொள்ளப்படவுள்ளதாகவும் இது அதிகாரம் மற்றும் விதிமுறைகள் தொடர்பான அதிகப்படியான சிக்கல்களை தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அலெய்னா சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இந்த உடன்பாடு இரு நாடுகளினதும் நலனுக்கான விதிகளை வகுக்கிறது என்றும் தெரிவித்த அவர், இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கமோ, அமெரிக்க படைகளை நிரந்தரமாக இலங்கையில் நிறுத்தும் எண்ணமோ அமெரிக்காவுக்குக் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

அதேநேரம், அமெரிக்க இராணுவம், கப்பல்கள் மற்றும் விமானங்களின் நுழைவுக்கும் ஒப்புதல் அளிக்கின்ற அல்லது மறுக்கின்ற உரிமையை இலங்கை கொண்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்