ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரின் வருகை குறித்த கருத்துக்களை நிராகரித்தார் திலக் மாரப்பன!

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரை தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட பிரச்சனை தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐ.நா. சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணை வைத்திருப்பவர்களால் இதுமாதிரியாக மேற்கொள்ளப்படும் விஜயங்களின் ஒரு பகுதியாக, சிறப்புச் செய்தியாளரின் வருகையும் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான விஜயங்களை வரவேற்கும் நோக்கம், ஐ.நா உள்ளடங்கலான சர்வதேச சமூகத்துடன் இலங்கை வெளிப்படையான மற்றும் பேச்சுவார்த்தை உணர்வில் ஒளிவு மறைவற்ற செயன்முறைகளைக் கொண்டிருப்பதற்காகவே.

ஒரு சிறப்புச் செய்தியாளர் இலங்கைக்கு வருவது இது முதல் தடவையல்ல; 8 ஜனவரி 2015 இலிருந்து இதுமாதிரியான 8 விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சிறப்பு செய்தியாளரின் விஜயத்தினால் நீதி அமைச்சின் செயலாளருக்கு வெளிநாட்டு அமைச்சினால் அனுப்பப்பட்ட கடித்தத்திலுள்ள பிரச்சனைகள் கொண்டுவரப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி, பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணக்களத்தின் பிரதிநிதிகள் கோடிட்டுக் காட்டினர்.

அந்த மாதிரியான நிகழ்வுகளின் தற்போதைய நிலைமைகள் பற்றியவற்றை வழங்கும் பணியைச் சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டது.

இப்பின்னணியிலேயே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பதிலாள் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கௌரவ சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.

இதன் நோக்கம், குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்பில் சிறப்புச் செய்தியாளர் பிரச்சனைகளை எழுப்பக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி, இந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகும்.

தலைமை நீதிபதி மற்றும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளுடனான சந்திப்புக்கான முன்பதிவுகள் வழங்கப்படவேண்டுமென்பது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பதிலாள் செயலாளரின் கடிதத்தில் எந்த இடத்திலும் பரிந்துரைக்கப்படவில்லை.

அதேபோலவே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கடிதத்தில் இவ்விடயங்கள் பற்றிய கலந்தாலோசிக்கப்படும் என்பதும் குறிப்பிடப்படவில்லை, ஆனால், அவை பற்றிக் கலந்தாலோசிக்கப்படக்கூடும் என்றே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்தது. இதுகூட, குறித்த விஜயத்திற்கு முன்பாக ஜூலை 5 இல் சம்பந்தப்பட்டவர்களுடனான நடைபெற்ற கூட்டத்தின் விளைவே.

குறிப்பிட்ட விஜயத்திற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் எடுக்கப்படும் முதல் நடவடிக்கை அல்ல இது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

உண்மையில், முன்பிருந்த இரு வெளிநாட்டு அமைச்சின் செயலாளர்கள், ஜூன் 2017 இலும் அக்டோபர் 2017 இலும், நேரடியாக கௌரவ தலைமை நீதிபதிக்கு எழுத்துமூலமாக அறிவித்து, இதேமாதிரியான சந்திப்புக்களைக் கோரியிருந்தார்கள். ஆனபோதிலும், இச்சந்தர்ப்பத்தில் சிறப்புச் செய்தியாளரின் கோரிக்கையானது நீதி அமைச்சின் செயலாளருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது.

முடிவாக, சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணை வைத்திருப்பவர்களின் விஜயங்களின்போது, ஆலோசனை மற்றும் ஈடுபாட்டு உணர்வில் இவ்வமைச்சு எப்போதுமே இலங்கையின் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்தே பணியாற்றியது என்பதைக் குறிப்பிடவிரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்