அரசியல் தீர்வு விடயத்தில் தமிழினத்தை பந்தாடுகின்றனர் – செல்வம் குற்றச்சாட்டு!

அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மூன்று பிரிவுகளாக பிரிந்து தமிழினத்தை பந்தாடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறிக்கப்பட்டது. அதற்கமைய அதற்கான நகர்வுகளையும் கூட்டமைப்பு முன்னெடுத்திருந்தது.  எனினும் அந்த நகர்வில் தொய்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

இரண்டு கட்சிகள் ஒன்றாக இணைந்து ஆட்சியமைத்தபோது, அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கான செயற்பாடுகள் தொடச்சியாக முன்னெடுக்கப்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் செயற்பாடு காரணமாக அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்டு, புதிய அரசு உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து தற்போது, அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ஒருபக்கம், பிரதமர் ஒரு பக்கம், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பக்கமென மூன்று பிரிவுகளாக எமது இனத்தை பந்தாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக சிந்திக்க வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்