இலண்டன் கிங்ஸ்டன் மாநகரின் முன்னாள் முதல்வர் வைத்தீஸ்வரன் தயாளன் அவர்களுக்கு யாழ் மாநகரசபையினால் வரவேற்பு

லண்டன் கிங்ஸ்டன் மாநகரின் உறுப்பினரும், முன்னாள் முதல்வருமாகிய யாழ் மண்ணைச் சேர்ந்த கௌரவ வைத்தீஸ்வரன் தயாளன் அவர்களுக்கு யாழ் மாநகரசபையினால் வரவேற்புடன் கூடிய கௌரவிப்பு நிகழ்வு நேற்று (25) யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்து மாநகரசபையின் கௌரவிப்பை ஏற்றுக்கொண்ட கௌரவ வைத்தீஸ்வரன் தயாளன் அவர்கள் விசேட கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார். இக் கலந்துரையாடலில் கௌரவ யாழ் மாநகர பிரதி முதல்வர், கௌரவ மாநகரசபை உறுப்பினர்கள், யாழ் மாநகர ஆணையாளர், மாநகர செயலாளர், பொறியியலாளர்கள், பிரதம கணக்காளர், மாநகரசபை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இவ் விசேட சந்திப்பில் உரையாற்றிய  கிங்ஸ்டன் மாநகரின் முன்னாள் முதல்வர் தனது உரையில் தான் முதல்வராக இருந்த காலப்பகுதியில் தனது மாநகரத்திற்கு வருகை தந்த யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் யாழ் மாநகரசபை தொடர்பில் கூறிய விடயங்கள், மாநகரின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட முயற்சிகளை நினைவுபடுத்தியதுடன், தனது அரசியல் பிரவேசம் மற்றும் கிங்ஸ்டன் முதல்வராக இருந்த போது முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்து கொண்டோர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக அவரது சேவைகள், செயற்பாடுகள் தொடர்பில் தான் அறிந்த விடயங்களை தனது உரையில் குறிப்பிட்ட மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் யாழ் மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

நிகழ்வின் இறுதியில் யாழ் மாநகரசபையில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் சார்பில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஒருவர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இவ்வாறாக இச்சந்திப்பு நிறைவில் யாழ் மாநகரின் சார்பில் முதல்வரால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அவர் மாநகரின் குறிப்பேட்டிலும் தனது வருகையை பதிவு செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்