அரசின் பங்காளியே தமிழ்க் கூட்டமைப்பு! – சாடுகின்றார் விமல்

சிங்களவர்கள் தமிழ் மக்களின் விரோதிகள் என்ற பிரசாரத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் அரசின் பங்காளியாக இருந்துகொண்டு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்கே அரசுக்கு எதிராகச் சபையில் பேசுகின்றனர்”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புதிய அரசமைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாகத் தெரிவித்த அரசு இன்னும் எதனையும் செய்யவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கு தெரிவிக்கின்றது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் பங்காளியாகவே இருந்து வருகின்றது. இதனை வாக்களித்த மக்களுக்கு மறைக்கவே அரசுக்கு எதிராக சபையில் கதைக்கின்றனர்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் எதிர்க்கட்சித் தலைவருக்குக் கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் அரசால் அவருக்கு வழங்கப்படுகின்றன” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்