கோட்டாவுக்கு எதிரான ‘ட்ரயல் அட் பார்’ வழக்கை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக ‘ட்ரயல் அட்பார்’ மன்றில் தாக்கல் செய்யப்பட்டு, தொடர் விரைவு விசாரணைக்குத் தயாராக இருந்த வழக்கை ஒக்டோபர் முதலாம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மனுவை பரிசீலனை செய்த புவனெக அலுவிகார, காமினி அமரசேகர மற்றும் எஸ். துரைராஜா ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற ஆயத்தால் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.

டீ.ஏ.ராஜபக்r நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தினர் எனக் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு நிரந்தர நீதாய நீதிமன்றத்தில் (ட்ரயல் அட் பார்) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு நிரந்தர நீதாய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்து கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனு அந்த நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு நிராகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து கோட்டாபய ராஜபக்சவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவைத் தங்களுக்கு விசாரணை செய்ய அதிகாரம் இல்லை எனத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுவை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரித்திருந்தது.

பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோட்டாபய ராஜபக்சவினால் விசேட மேன்முறையீட்டு மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா முன்வைத்த விடயங்களைக் கருத்தில்கொண்ட நீதியரசர்கள் குழு மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதி வழங்கினர்.

மனுவை ஒக்டோபர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டமையுடன் அதுவரையில் நிரந்தர நீதாய நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரணை செய்யவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்