இணக்க அரசியல் இனிமேல் ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை-இரா.மயூதரன்

தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல் செயற்பாடுகளை கிழக்கு மாகாணத்தில் வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக்கள் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதன் போது வாகரை கதிரவெளி பிரதேச மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்……..
கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மக்கள் முஸ்லீம்களினால் பல்வேறு வழிகளில் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி வருகின்றீர்கள். இந்த இக்கட்டில் இருந்து தப்புவதற்கு சிங்களர்களுடன் கைகோர்த்தால் என்ன என்ற எண்ணத்தில் இருப்பதை அறிய முடிகிறது. நம்பி வாக்களித்த அரசியல் தலைமைகளும் கைவிட்ட நிலையில் இதை விட்டால் வேறு வழி இல்லை என்ற கையறு நிலையில் நீங்கள் நிற்பதை உணரமுடிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிபணிவு அரசியல் போக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள நீங்கள் முஸ்லீம்களால் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இவர்களிடம் இருந்து தப்புவதற்கு சிங்களர்களுடன் கைகோர்த்தால் என்ன என்ற எண்ணம் கிழக்கு மாகாண மக்களிடம் ஏற்பட்டு வருவதை அறியக்கூடியதாக உள்ளது. முதுகை சொறிந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் அடுப்பில் இருக்கும் நெருப்புக் கொள்ளியை தவிர வேறொன்றும் இல்லை. ஆகவே இருக்கிற கொள்ளிக்கட்டையில் தணல் குறைந்த கட்டை எது என்று பார்த்து அதனை எடுத்து முதுகை சொறிவதற்கு ஒப்பான நிலையில் நீங்கள் இருப்பதை உணர முடிகிறது.
இந்த இடத்தில் தான் ஒரு விடயத்தை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். இணக்க அரசியலென்பது ஆயுத மௌனிப்பின் பின்னர் தோற்றுப்போய் விட்டது. 30 வருடங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் போராட்டத்தில் இருந்து தமிழ் மக்களை பிரித்தெடுக்கும் தந்திரத்தின் அடிப்படையில் தான் துணை ஆயுதக் குழுக்களாக செயற்பட்ட ஈ.பி.டி.பி. ஐ அரவணைத்து சலுகை அரசியலை ஊக்குவித்தது அரசாங்கம். தமிழ் மக்களையும் முஸ்லீம்களையும் ஒன்று சேரவிடக்கூடாது என்பதற்காகவே முஸ்லீம் அரசியல் தரப்பை அரவணைத்து அமைச்சு பதவிகளை கொடுத்தது அரசாங்கம். இந்த நிலமை ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் மாறிவிட்டதென்பதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியலின் தோல்வி எடுத்துக்காட்டுகின்றது.
டக்ளஸ் தேவானந்தாவோ முஸ்லீம் தரப்போ இணக்க அரசியல் மூலம் சாதித்தவற்றில் துரும்பளவையேனும் கூட்டமைப்பினரால் பெறமுடியாமல் போனமைக்கு இதுவே காரணம். இணக்க அரசியல் மூலம் அரசுடன் ஒட்டி உறவாடிய தரப்புகள் இன்று அரசாலும் மக்களாலும் கைவிடப்பட்டவர்களாக இருப்பது எமக்கான பாடமாகும். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் அவர்கள் குறிப்பிடுவதைப் போன்று நாம் கூட்டமைப்பிற்கு எதிரான அரசியலை முன்னெடுக்கவில்லை.
இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் இனப்படுகொலையுடன் ஆயுதப்போரட்டம் மௌனிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் நடந்தது மாபெரும் துயரம். ஆனாலும் அங்கு கொல்லப்பட்ட ஒன்டரை இலட்சம் தமிழர்களது உயிர்த்தியாகமானது விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் துரும்புச்சீட்டாக இருந்தது. உலகில் எத்தனையோ நாடுகளில் இது போன்ற பல பிரச்சினைகள் நடைபெற்று வருகின்ற போதிலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தமது பிரச்சினையை கொண்டு போகவே போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகளின் தியாகம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அரங்கிற்குள் எமது பிரச்சினையை தங்கத் தாம்பாளத்தில் வைத்து கொண்டுசேர்க்க உதவியது.
புலம்பெயர் தமிழர்களின் தீவிர போராட்டங்களும் வலுச்சேர்க்க நடந்தது இனப்படுகொலை தான் என உறுதிசெய்யும் வகையில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கூட்டமைப்பு அதனை கைவிட்டிருந்தது. வடக்கு மாகாண சபையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று தீர்மானத்தை கொண்டுவர வெளிக்கிட்ட போதுதான் முன்னாள் முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் கூட்டமைப்பு தலைமைக்கும் இடையே பிரச்சினை ஆரம்பமாகியது. இந்தா தீர்வு வருகிறது அந்தா தீர்வு வருகிறது என்று நல்லாட்சி என்ற பெயரிலான அரசிற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருந்த கூட்டமைப்பு தலைமை அந்த அரசிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் இனப்படுகொலை தீர்மானத்தை வடக்கு மாகாண சபையில் கொண்டு வருவதை தடுத்தார்கள். அதனையும் மீறி நடந்தது இனப்படுகொலைதான் என்ற தீர்மானத்தை வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரன் ஐயா கொண்டுவந்திருந்தார்.
ஏற்கனவே 2011 ஆம் ஆண்டில் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் இறுதிப்போரில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை. அதற்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஏழு கோடி தமிழர்களின் ஆட்சி மன்றமான தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்த நிலையில் வடக்கு மாகாண சபையில் கொண்டுவாந்த தீர்மானத்தை முன்மொழொந்து இரண்டாவது தடவையாகவும் ஜெயலலிதா அம்மையார் தீர்மானத்தை கொண்டு வந்து சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியிருந்தார். அப்போது தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்து நின்று நடந்தது இனப்படுகொலைதான் என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் ஒரு வேளை இப்போது நாம் சுதந்திர தேசத்தில் இருந்திருப்போம்.
ஆம் நடந்தது இனப்படுகொலை என்று நிரூபணமானால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழர்கள் என்பதற்காகவே கொன்று குவித்தவர்கள் சிங்கள அரச படைகள். ஆகவே சர்வதேச தலையீட்டில் அந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு தமிழ் மக்களாகிய எம்மால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பினர் தமிழர் விரோத நிலைப்பாட்டில் நின்று இந்த அரசுக்கு முண்டுகொடுத்து வரும் கையறு நிலையில் தான் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை மதிப்பிற்குரிய விக்னேஸ்வரன் ஐயா தலைமையில் தொடங்க வேண்டியேற்பட்டது.
ஆகவே வடக்கு கிழக்கு என்ற வேறுபாடுகள் கடந்து தமிழர்கள் என்ற அடையாளத்தில் ஒன்றாக வேண்டியது கட்டாயமாகும். ஒரு கை தனித்திருந்தால் பலம் இல்லை. இரண்டு கைகளும் இணையும் போதுதான் பலமாகும். அதன் மூலம் சாதிக்கவும் முடியும். தமிழர்கள் என்ற அடையாளத்தில் ஒன்றாகி எமக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினர்கள் மற்றும் வாகரை கதிரவெளி பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்