தமிழரின் வரலாற்றுச் சான்றாக மற்றுமொரு பிள்ளையார் ஆலயம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் தமிழரின் வரலாற்றுச் சான்றாக பிள்ளையார் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் என அழைக்கப்படும் இவ்வாலயம் மட்டக்களப்பு வெலிக்கந்தையிருந்து வடமுனைக்கு செல்லும்போது கிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் ஸ்ரீ ரமண மகரிசி நற்பணி மன்றத்தினர் இவ்வாலயம் குறித்த வரலாற்றுப் பொக்கிஷங்களை தேடித்தொகுத்து ஆவணப்படுத்தி ஆலயத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.

1900 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் தம்மங்கடவையிலிருந்து வந்தாறுமூலை வரையான போக்குவரத்து பாதையில் மாந்திரை ஆற்றங்கரையில் மதுரை மரத்தின் கீழ் இந்துக்களால் வைத்து வளிபடப்பட்ட ஆலயமே இந்த ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் ஆகும்.

இவ்வாலயத்தை சுவாமி ஐயம்பிள்ளை என்பவரின் தனி முயற்சியினாலும் அப்போதிருந்த இந்து மக்களின் ஒத்துழைப்புடனும் மூலஸ்தானத்துடன் கூடிய மண்டபத்துடன் ஆலயம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலையும் பிரதிட்சை செய்யப்பட்டது.

1925 ஆண்டு முத்துக்கல் உடையாரும் பொதுமக்களும் சேர்ந்து ஆலயத்தை அபிவிருத்தி செய்து ஆலத்துக்குரிய மடமும், மண்டபமும் அமைத்து 1929 ஆண்டு இந்து கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆலயத்துக்கு நிரந்தரமாக அர்ச்சகர் நியமித்து தினப்பூசையுடன் விசேடபூசைகளும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

அத்துடன், விநாயகரின் அருளுடன் மட்டக்களப்பு, வந்தாறுமூலை, வாழைச்சேனை, தம்மங்கடவை, முத்துகல் போன்ற பல பகுதிகளிலுள்ள மக்கள் சேர்ந்து ஆலயத்துக்கு வருடாந்த அலங்கார உற்சவத்தை ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பாக பிராமண அர்ச்சகரைக்கொண்டு மேளதாள வாத்தியம் முழங்க மிகவும் விமர்சையாகவும் கலாசார நிகழ்வுகளோடும் திருவிழாவைக் கொண்டாடியுள்ளனர்.

மேலும் தீர்த்த உற்சவம் ஆடிமாதம் பூரணை தினத்தில் மகாவலி கங்கை மாந்திரை ஆற்றில் இடம்பெற்றுவந்துள்ளது.

இவ்வாறு சிறப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இடம்பெற்றுவந்த பூசை, உற்சவ நிகழ்வுகள் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயரவும் ஆலயம் பூசை வழிபாடுகள் இன்றி தற்போது காடுகள் சூழ்ந்து கிடக்கின்றது.

இந்த நிலையில், எமது புராதான பொக்கிசங்களையும் தமிழினம் வாழ்ந்த இடங்களையும் மீளவும் பொறுப்பேற்று இடிபாடுகளைத் திருத்தி பாதுகாக்க வேண்டியது தலையாய கடமை என சமூக ஆர்வலர்களும், நலன்விரும்பிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த வரலாற்றுப் பொக்கிசமான ஆலயத்தை பழைய நிலைக்கு புனரமைத்து வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றுவதற்கு கிழக்கு இந்து மக்களிடமிருந்து ஆலய அபிவிருத்திக்கான உதவிகளை வேண்டி நிற்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்