வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க இடமளிக்க மாட்டேன் – ரணில்

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “வவுனியாவில் சிங்கள மக்களை குடியேற்றும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. கச்சல் சமணல குளத்தை புனரமைக்கும் நடவடிக்கை மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை வனப்பாதுகாப்பு பகுதி. இதில் மக்களைக் குடியேற்ற முடியாது.

எந்த மாவட்டத்திலும் இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, “முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குளத்தைப் புனரமைக்கக் கோரிய அனுமதியை நான் வழங்கியுள்ளேன். ஏப்ரல் மாதமே அதற்கான அனுமதி வழக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்த ஜனாதிபதியின் கூட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைவிட மேலும் நான் 40 மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளேன். மேலதிமாக தேவைப்படும் நிதியும் வழங்க முடியும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்