முறை தவறியது வடக்கு மாகாண சபை! சிவமோகன் காட்டம்

ஜனாதிபதியிடம் பேசி நிதியை எடுத்து இருக்கலாம். ஆனால் வடமாகாண சபை அதனை சரியான முறையில் செயற்படுத்த தவறிவிட்டது என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அவரது வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற கம்பரலிய உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது வீதி திருத்தம், குடிநீர், பொது கட்டிட புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு என 42 பொது அமைப்புக்களுக்கு  28.2 மில்லியன் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

முழு அமைச்சர்களும் ஜனாதிபதிக்கு முன்னால் சென்று தங்களுக்குரிய நிதிகளை கோரி எடுத்து வந்து வேலை செய்தார்கள். வட, கிழக்கு மாகாணத்திற்கு விசேடமாக எடுத்திருக்கலாம். ஆனால் வடமாகாண சபை சரியான முறையில் அதனை செயற்படுத்த தவறிவிட்டது. எங்களுக்கு என்று நியதிச் சட்டங்கள் இருந்தது. இன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் பல பேட்டிகளைக் கொடுக்கின்றார். தான் சொல்லி வந்தது ஐந்து விடயம். அதில் ஒன்றும் செய்யவில்லை. அவர் ஒன்று, இரண்டையாவது செய்திருக்கலாம். இந்த நியதிச் சட்டங்களை உருவாக்குவதற்கே அவரை கொண்டு வந்தோம். நான் பல தடவை நியதிச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என பிரேரணைகள் கொண்டு வந்த போதும், கொண்டு வந்த நியதிச் சட்டங்கள் எல்லாம் அவருடைய ஆலோசர்களின் பெயரில் கொழும்பில் தான் கிடந்தது. அவை திரும்பி நியதிச் சட்டமாக வரவில்லை. அதனால் தான் போக்குவரத்து சபைக்கிடையில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டது. இப்படி பல விடயங்கள் நடந்தது.

இன்று எமது பொருளாதார வர்த்தக நிலையத்தில் மாடும், நாயும் படுத்திருக்கின்றது. அதனை நாங்கள் கேட்ட மாதிரி நகரத்திற்கு அண்மையில் தந்திருந்தால் பொருளாதார மத்திய நிலையம் எங்கோ சென்றிருக்கும். அவ்வாளவு தூரம் எம்மை கொண்டு சென்று மோசமான நிலைக்கு விட்டுள்ளார். ஆகவே நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

அரசியல் யாப்பு கொண்டு வருவதாக கூறப்பட்டது. அதற்கு என்ன நடந்தது என்கிறார்கள். இதுவரை தமிழர்களுக்கு மேல் பழி தான் போடப்பட்டுள்ளது. அதாவது ஒஸ்லோவில் புலிகள் போய் வேணாம் என்று வந்துவிட்டார்கள். ஒம் என்று சொல்லியிருந்தால் எங்கோ சென்றிருக்க முடியும். உண்மை தான் ஓம் என்றிருந்தால் எங்கேயோ போயிருக்கலாம். இன்றைக்கு இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் சர்வதேச நாடுகள்.

> விடுதலைப் புலிகள் இருக்கும் போது யப்பான் நாட்டைச் சேர்ந்த யசூசி அக்காசி கிளிநொச்சிக்கு சென்று அங்கு எல்லோரையும் சந்தித்து கதைத்து விட்டு சென்றார். அப்போது கொழும்பு நுகேகொட உடுப்பு கடை ஒன்றில் குண்டு வெடிப்பு நடந்தது. அது யார் செய்தார்களோ தெரியாது. அப்போது கொழும்பு வந்த அவர் அறிக்கை ஒன்றை விட்டார். விடுதலைப் புலிகள் இப்படியான வேலைகளை செய்யக் கூடாது. எதிர்காலத்தில் அவர்களை நாங்கள் அங்கீகரிப்போம்.

கடைசியில் எமது மக்களுக்கை இங்கிருந்து கொண்டு சென்று கிளைமோர் வைத்தார்கள். அப்ப கூட விடுதலைப் புலிகள் அமைதி தான் காத்தார்கள். இறுதி போரில் ஓரு மூளைக்குள் முடக்கிய போது ஒரு உத்தரவு சென்றிருந்தால் இந்த போராட்டம் வேறு மாதிரி சென்றிருக்கும்.

வடக்கில் செய்ததைப் போல் விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் செய்திருக்க முடியும். ஆனால் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் அப்பாவி மக்களை கொள்வதை தனது கொள்கையில் கொண்டிருக்கவில்லை. அதனால் தான் அவர்கள் அதை செய்யவில்லை. ஆகவே இது ஒரு விடுதலைப் போராட்டம். இதனை உருக்குலைக்க முடியாது. அதனை அடுத்த சமுதாயத்திற்கு கடந்த வேண்டும். அதனை பின்னுள்ள சமுதாயம் பார்த்துக் கொள்ளும். ஆனால் சரியான தகவல்களை அவர்களுக்கு வழங்காவிட்டால் நாளை என்ன நடக்கும்..? எனவே தமிழின விடுதலைக்காக தமிழர்கள் ஒற்றுமையாக ஒரே இடத்தில் நிற்க வேண்டும்.

அரசியலமைப்பு தொடர்பான பொறுப்பு கூறலை சர்வதேச சமூகமும், இந்த அசாங்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை செயயாது விட்டால் பல நாடுகள் சுதந்திரம் பெற்றது போல் நமது சுயநிர்ணய உரிமையை நாமும் கோரமுடியும். அதை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்க வேண்டியவர்கள் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான ரி.கே.இராஜலிங்கம், க.சுமந்திரன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உதிரியநாதன், தமிழரசு கட்சி மாவட்ட மட்ட உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்