மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 75 இந்தோனேசிய குடியேறிகள்

மலேசியாவிலிருந்து இந்தோனேசிய சென்றடைய முயன்ற 75 இந்தோனேசிய குடியேறிகள் பயணித்த படகு மூழ்கிக்கொண்டிருந்த நிலையில் அவர்களை மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சி மீட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 6 அன்று இவர்கள் மலேசியாவின் சுங்கய் ஏர் ஐடம் (பெனாங் மாநிலம்) பகுதியிலிருந்து இந்தோனேசியாவின் டன்ஜூங் பலாய் (வட சுமாத்ரா மாகாணம்) பகுதியை சென்றடைய முயன்ற நிலையிலேயே குடியேறிகளின் மரப்படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

“சாயந்தது போன்று பெரும் அலையில் படகு மெதுவாக நகர்ந்ததை கண்டு சந்தேகமடைந்து படகை நிறுத்தினோம். அப்போதே அதிலிருந்த குடியேறிகள் மீட்கப்பட்டனர்,” என ஏஜென்சியின் இயக்குனர் முகமது ரோஸ்லி கசிம் தெரிவித்துள்ளார். 

5 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 75 குடியேறிகள் சென்றிருக்கின்றனர். இந்த குடியேறிகள் முறையான ஆவணங்களின்றி மலேசியாவில் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்தோனேசியா செல்வதற்காக குடியேறிகள் ஒரு நபருக்கு 800 மலேசிய ரிங்க்ட் (சுமார் 13 ஆயிரம் இந்திய ரூபாய்) ஏஜெண்டிடம் கொடுத்திருக்கின்றனர். மலேசியாவில் வசித்து வரும் அந்த இந்தோனேசிய ஏஜெண்ட்டை காவல்துறை தேடி வருகின்றது. 

இக்குடியேறிகள் ஹோட்டல், துப்புரவுத்தொழில் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலில் பணியாற்றி வந்திருக்கின்றனர். மீட்கப்பட்ட குடியேறிகள் அனனவரும் குடிவரவு மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்