நாக மரக்கன்றுகளை கம்போடியாவில் வழங்கினார் ஜனாதிபதி மைத்திரிபால

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் கம்போடியாவின் ஓக் தோங் மலையில் அமைந்துள்ள தியான நிலையத்துக்கு (Meditation center of ouk Dong mountain) இலங்கையின் தேசிய மரமான 10 நாக மரக்கன்றுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று  (10) வழங்கிவைத்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பௌத்த மதத்தை அடிப்படையாகக்கொண்ட இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான தொடர்பை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்தும் நோக்கில் கம்போடிய மன்னரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி கம்போடியாவுக்கான விஜயத்தை கடந்த புதன்கிழமை (07) மேற்கொண்டார். இது இலங்கை ஜனாதிபதி ஒருவர் கம்போடியாவில் அரசமுறை சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தும் அதேவேளை, தேரவாத பௌத்த தர்மத்தை பாதுகாத்து உலகெங்கும் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கையில் விரிவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் தேரவாத பௌத்தத்தை போஷிக்கும் நாடு என்ற வகையில் கம்போடியாவுக்கு ஜனாதிபதி மேற்கொண்ட இந்த சுற்றுப் பயணமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுவூட்டும், பௌத்த மத உறவுகளை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சித் தொடரின் பிரதான நிகழ்வாக நாக மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பெளத்த மதத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும் கம்போடியாவில் நாக மரம் காணக் கிடைப்பதில்லை என்பதும், பௌத்த மத ரீதியாக சிறப்பு வாய்ந்த நாக மரக்கன்றுகளை வழங்கி வைத்ததனூடாக இரு நாடுகளுக்கிடையே பௌத்த மத நல்லுறவுகள் மேலும் வலுவடையும் என்றும் அந்நாட்டு மகாசங்கத்தினர் கருத்து தெரிவித்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த அந்நாட்டு மகாசங்கத்தினர், இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான பௌத்த மத நல்லுறவு மிகவும் பழமை வாய்ந்தது என்றும், நிகழ்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பெளத்த மத நல்லுறவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் நாமம் வரலாற்றில் பொறிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வண. கலாநிதி ஓமல்பே சோபித நாயக்க தேரர், புனித பௌத்த தர்மத்தை பாதுகாப்பதுடன், அதனை உலகம் முழுவதும் வியாபிப்பதன் முக்கியத்துவத்தை பெளத்த தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனங்கண்டுள்ளார் என்று தெரிவித்தார். மேலும், ஆசிய பௌத்த சங்கமொன்றை நிறுவி ஆசிய கண்டத்தின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார் எனவும் அவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த சோபித நாயக்க தேரர், மகத்துவம்மிக்க நாக மரக் கன்றுகளை ஜனாதிபதி வழங்கி வைத்தமை உன்னத நிகழ்வாக ஆன்மீக வரலாற்றில் இந்நிகழ்வு இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கம்போடியா மகா சங்கத்தினர் மற்றும் இலங்கை – கம்போடியா பக்தர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் – என்றுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்