வடக்கில் அபகரிப்பு இடம்பெறவில்லையென ரணில் பொய்யுரைக்கின்றார். ரவிகரன்

வடபகுதியில் அபகரிப்புக்கள் இடம்பெறவில்லை என பிரதமர் ரணில், அப்பட்டமான பொய்யுரைப்பதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றில் வடபகுதியில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பிரதமர் ரணி விக்ரமசிங்க வடக்கில் அபகரிப்புக்கள் இடம்பெறவில்லை எனவும், அபிவிருத்தி வேலைகளே இடம்பெறுவதாகவும் தெரிவித்திருநதார்.

பிரதமரின் இக்கருத்து தொடர்பில் கருத்து வெளியிடும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு மாறாக நாட்டின் பிரதமர், வடபகுதிகளிலே நிலஅபகரிப்புகள் எதுவும் இடம்பெறவில்லையெனவும், அபிவிருத்தி விடயங்கள்தான் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் மிகவும் ஆழமாக அவர் தெரிவித்திருந்தார்.

இது முற்றுமுழுதான பொய்யான கருத்துக்கள் என்பதனைத் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

ஏன் எனில் கடந்த முதலாந் திகதி முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய்ப் பகுதி கமக்கார அமைப்பினருடன் சேர்ந்து நான் சென்று பார்வையிட்ட இடங்கள் முழுவதுமே அபகரிப்புகள் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

நில அபகரிப்பினைப் பல வடிவங்களிலும் இன்றைய அரசாங்கமும் செய்துகொண்டிருக்கின்றது என்பதற்கு மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

நில அபகரிப்புகள் வடபகுதிகளில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

அபகரிப்புகள் இடம்பெறவில்லை என்று பிரதமர் கூறும் கருத்துப் பொய்யானது என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்