வடக்கு மக்களுக்கு மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் வழங்கியுள்ள உறுதி

வரலாற்று சிறப்புமிக்க பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தமைக்கு அந்த கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பை தனக்கு வழங்கியமை காலத்தின் பணி என கருதுகிறேன். நான் நாட்டை நேசிக்கின்றேன்.

நாடு குறித்து எனக்கு தூரநோக்கு இருக்கின்றது. தாய் நாட்டுக்கு சௌபாக்கியத்தை உருவாக்கிக் கொடுக்க கிடைத்துள்ள சந்தர்ப்பமாக இதனை ஏற்றுக் கொள்கிறேன்.

மக்களுக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்க தயார் என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். எல்லைகள் வரையறுக்காது வேலை செய்வேன்.

எமது நாட்டுக்கு எதிரான எவருக்கும் தலை வணங்கியதில்லை. எதிர்காலத்திலும் நாட்டின் இறையாண்மை மீது கை வைக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை.

நாட்டுக்கு ஒழுக்கமான, ஊழலற்ற தேசப்பற்றுள்ள தலைவரே தேவைப்படுகிறார். ஜனாதிபதியிடம் மக்கள் இப்படியான குண இயல்புகளையே எதிர்பார்க்கின்றனர்.

நாட்டின் முழு பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது எமது அரசாங்கத்தின் பிரதான பணியாக இருக்கும். இலங்கையை மீண்டும் உலகில் பாதுகாப்பான நாடாக மாற்ற முடியும் என்பது எனது திடமான நம்பிக்கை.

நாட்டு பிள்ளைகளின் பாதுகாப்பை நான் பொறுப்பேற்கின்றேன். நாட்டில் பல்வேறு மதங்களை பின்பற்றும் நபர்கள் இருக்கின்றனர். மற்றவர்களின் கலாச்சாரத்தை மதிப்பவர்கள் நாங்கள். அதுவே எமது பலமாக இருக்க வேண்டும்.

வடக்கு மக்களுக்கே உரிய விசேட பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சினைகளை எமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் எதிர்கால சந்ததியை அறிவால் போஷிக்க விசேட கவனத்தை செலுத்த போவதாகவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்