பிரபா பிறந்தமையால் வல்வெட்டி எங்கள் தேசத்து மண் ஆகியது! அந்தமண்ணில் மாவை வீராவேசம்

வரலாற்றுப்புகழ் பெற்ற சாதனைகளைப் படைத்தவர்கள் பிறந்த மண்ணான வல்வெட்டித்துறை மண்ணில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர னும் பிறந்து வளர்ந்து இந்த மண்ணின் விடிவுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றார். அந்தகைய பெருமைகளைக் கொண்ட இந்த வல்வெட்டித்துறை மண்ணை எங்கள் தேசத்து மண்எனநாங்கள் புகழாரம் சூட்டுகின்றோம்.

-இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.

வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்ட ஆழிக் குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றபோதே நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்று கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வரலாற்றுப் புகழ் பெற்ற தமிழனான ஆழிக் குமரனுக்கு ஒரு நினைவுச் சின்னமாக இந்த நீச் சல் தடாகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. எதிர்காலத் தில் எம் சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்கக் கூடிய வகையில் இந்த நீச்சல் தடாகம் காணப் படுகிறது. அதனை இங்கு அமைத்ததற்காக அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட ஏனையவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்லவேண்டும்.

ஆழிக்குமரனது சாதனைகளுக்காக இங்கு அவருக்கு பாராட்டு விழா நடந்தபோது நானும் இங்கு வந்திருக்கின்றேன். தமிழர்களுக்கு இந்த நாட்டிலே சமனான முறையான சந்தர்ப்பங்கள் கிடைத்தால் இப்படிப் பல சாதனைகளை உலகுக்கும் நாட்டுக் கும் செய்து காட்டியிருப்பார்கள் என்பதை இந்த நினைவுச்சின்னம் சொல்லி நிற்கின்றது.

உலகத்தில் யாரும் செய்யாத சிறந்த சாதனையை புகழ்பெற்ற தமிழ் மகன் ஆழிக்குமரன் செய்திருக்கின்றார். அவரது இந்தச் சாதனையை எங்கள் எதிர்காலச் சந்ததிகள் இதனூடாக விளங்கிக் கொள்வார்கள்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையிலே தமிழர் சுதந்திரம் பற்றிய தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் தமிழர் தரப்பு ஒன்றுபட்டிருக்க வேண்டு மென்று இந்த மண்ணில்தான் தீர்மானம் எடுக் கப்பட்டது. அப்படி தீர்மானம் எடுத்த மண்ணில்தான் சாதனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இந்த வல்வெட்டித்துறை மண்ணில் தான் பிரபாகரன் பிறந்து வளர்ந்து இந்த மண்ணின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இந்த மண்ணை எம் தேசத்து மண் என்று புகழாரம் சூட்ட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதை நாங் கள் ஒருபோதும் மறந்திருக்க முடியாது. இனம் விடுதலை பெறும் வரைக்கும் அப்படியான சாதனை படைத்தவர்களை – அர்ப்பணித்தவர்களை – விடுதலை வீரர் களை நாங்கள் மறந்துவிட முடியாது – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்