முதலமைச்சரின் வாகனம் எவ்வாறு மாநகர முதல்வருக்குக் கிடைத்தது? விளக்குகின்றார் ஆர்னோல்ட்

யாழ்.மாநகர நகரபிதா தற்போது வடக்கு மாகான முதலமைச்சர் பாவித்த வாகனத்தை தனது மாநகர வேலைகளுக்குப் பாவிக்கின்றார் என்பது தொடர்பாக பல்வேறுவிதமான விசமப் பிரசாரங்கள் இணையத் தளங்கள் வாயிலாகவும், ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கேற்றால்போல் தத்தம் முகநூல்களிலும் எழுதிவருகின்றனர். இது தொடர்பாக, ஓர்  ஊடக மறுப்பு அறிக்கையைத் தருமிடத்து எமது ”தமிழ் சி.என்.என்.” இணையத்தில் எம்மால் பிரசுரிக்கமுடியும் என்று யாழ்.மாநகர முதல்வருக்கு நேற்று இரவு தொலைபேசி அழைப்பு எடுத்தேன். அவர் நிலைமையை எனக்கு விளக்கினார். ஆனால், ஊடகங்களில் வரும் விசமப் பிரசாரங்களுக்கு எல்லாம் பதிலளிக்கவேண்டிய தேவை தனக்கில்லை. அவற்றில் தான் நேரத்தைச் செலவழித்தால் மக்களுக்கான அபிவிருத்தியில் ஒன்றிக்க முடியாது போய்விடும் என மறுத்துவிட்டார். ஆனாலும் அவரிடமிருந்து அறிந்துகொண்ட விடயங்களைக் கொண்டு அந்தக் கருத்துக்களை பிரசுரிக்க எண்ணி இந்த ஆக்கத்தை வரைகின்றேன்.

இலங்கையில் மூன்று வகையான ஆட்சிப் பீடங்கள் காணப்படுகின்றன. இந்த மூவகை ஆட்சிப் பீடங்களினதும் அதிகாரங்களில் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டாலும் மூன்றுக்குமே சட்டத்தை இயற்றுகின்ற அதிகாரமும், வருமான மூலத்தை உருவாக்கி, தாம்பெற்ற வருமானங்களுக்கு அமைய பாதீட்டை உருவாக்கி, அவற்றினூடாக செலவுகளை மேற்கொள்கின்ற அதிகாரமும் காணப்படுகின்றன. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் மூன்றும் ஓர் அரசே! ஆட்சி முறையே!

மத்தியில் உள்ளது மத்திய அரசு. மாகாணத்தில் உள்ளது மாகாண அரசு. ஊரை ஆட்சிசெய்வது ஊராட்சி மன்றங்கள். இந்த ஒவ்வொரு ஆட்சி முறைகளும் தனித்துவமானவை. இந்த ஆட்சிப்பீடங்களை அந்தப் பீடத்தைத் தவிர எவரும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

ஊராட்சி மன்றங்களில் யாழ்.மாநகரத்தை ஆட்சிசெய்பவர் மாநகர பிதா ஆவார். மாநகரத்தின் முதற்குடிமகனும் அவரே ஆவார். அவர் ஓர் நிறைவேற்று அதிகாரி. அவருடைய அதிகாரத்தில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. ஆனால், இந்த நிறைவேற்று அதிகாரிக்குக் கீழே ஆணையாளருடன் ஓர் நிர்வாகக் கட்டமைப்பு காணப்படுகின்றது. அந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு நிர்வாக அதிகாரியாக ஆணையாளர் காணப்படுவார். ஆணையாளர், மாநகரபிதா அனைவருக்கும் மேலே – தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஆட்சிப்பீடமாக சபை காணப்படுகின்றது. இந்த சபையிலுள்ள 45 உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடனேயோ அல்லது ஏகமனதாகவோ நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எவரும் மாற்றவும் முடியாது. கட்டுப்படுத்தவும் முடியாது. அவ்வாறு அதிகாரம் மிக்க அந்த உயரிய சபை, தனது சபை நிதியில் மேயருக்கான புதிய வாகனக் கொள்வனவுக்கு நிதி ஒதுக்கி, கொள்வனவுக்கான சபை அனுமதியையும் வழங்கியுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஏப்ரல் மாதம் நடைபெற்ற குண்டுத்தாக்குதலின்போது, வடக்கின் பாதுகாப்பையும் அதிகரிகப்பதற்காக மாநகர முதல்வர், வடக்கு மாகாண ஆளுநருடன் இணைந்து பணியாற்றிய நேரத்தில், ஆளுநராகவே முதல்வர் பாவிக்கின்ற இந்த வாகனம் முதல்வர் என்ற பதவிக்கு ஏற்புடையதல்ல என்று தெரிவித்துவிட்டு, தனது நிர்வாகக் கட்டமைப்பின் கீழே இருந்த வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்த காலத்தில் பயன்படுத்திய வாகனத்தை பிரதம செயலாளர் ஊடாக முதல்வருக்கு வழங்கினார். இதுதான் நடந்தது.

உள்ளூராட்சி மன்றங்கள் மாகாண அரசின் கீழ் உள்ளன. மாகாண அரசு தாராளமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரங்களையோ அல்லது தமது பொறுப்பில் உள்ள சொத்துவங்களையோ வழங்கலாம். ஆனால் திரும்பப்பெறமுடியாது என 13 ஆம் திருத்தத்தில் உள்ளது. அதேநேரம் நிர்வாக அதிகாரிகள் நிறைவேற்று அதிகாரிகள் விடயத்தில் தலையிடுதல் முறையன்று.

நிறைவேற்று அதிகாரிகளான மாநகர, நகர பிதாக்கள், தவிசாளர்கள் மக்களால் தெரிவுசெய்ய்பட்டவர்கள். அவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சிப் பீட எல்லையில் முதற்குடிமக்கள். அவர்களுக்குரிய கௌரவங்கள் காப்பாற்றப்படல் வேண்டும்.

இந்த வாகனப் பயன்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாநகர முதல்வர், தன்னிடம் ஒன்றுக்கு இரண்டு வாகனங்கள் வீட்டில் இருக்கின்றன. யார் இந்தக் கதிரைக்கு வந்தாலும் அவர்கள் தமது பணியை இலகுவாகச்செய்யவேண்டும் என்ற தூரநோக்கோடு நாம் எமது சபை நிதியில் வாகன கொள்வனவுக்கு நிதி ஒதுக்கினோம். அதற்குரிய அனுமதியைக்கூட வழங்குகின்றார்கள் இல்லை என்று வேதனைப்பட்டார்.

இதில் உள்ள உண்மையான பிரச்சினை என்னவென்றால், ஜனாதிபதியின் கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தி யாழ்.மாவட்டத்தில் தேசியப்பட்டியலில் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே, தமது சில வியாபாரங்களுக்கு மாநகரசபை போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்பதால் ஜனாதிபதியிடம் இந்த வாகனத்தை மீளப்பெறவேண்டும் என்று கொடுத்த நெச்சரிசலின் பயனாகவே வாகனம் மீள ஒப்படைக்கும்படி கோரப்பட்டது.

இந்த சூட்சுமங்கள் தெரியாத – ஆட்சிப்பீட – நிர்வாக ஒழுங்குகள் எவையும் தெரியாத ஊடகங்கள், தனிப்பட்ட காழ்ப்புணர்வில் இவ்வாறு பொய்யான – உண்மைக்குப் புறம்பான – கருத்துக்களைத் தெரிவிப்பது வேதனையளிக்கின்றது.

தெல்லியூர் சி.ஹரிகரன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்