ஒரு பக்கம் தமிழருக்கு எதிரான செயல் வீரன் மறுபக்கத்தில் ஒன்றுமே செய்ய முடியாத கட்சி

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும்? என்கிற சரியான தீர்மானத்தை வருகின்ற நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் என்று எம். ஏ. சுமந்திரன் எம். பி தெரிவித்தார்.

திருக்கோவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மக்களை சந்தித்து பேசியபோது இவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு
இது மிகவும் சிக்கல் நிறைந்த சவால் மிகுந்த தேர்தல். ஒரு பக்கத்தில் வேட்பாளராக செயல் வீரன். ஆனால் எல்லா வகையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான செயல் வீரன். மறுபக்கத்தில் ஒன்றுமே செய்ய முடியாத வக்கற்ற கட்சி. இந்நிலையில் எந்த பக்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதே எமக்குசவால் நிறைந்த விடயம்தான். ஆயினும் இச்சவாலில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்வாங்கி ஓடாது. சரியான தீர்மானத்தை நாம் எடுப்போம்.
நாம் முன்னோக்கி செல்ல முடியாவிட்டாலும் பின் நோக்கி நகர கூடாது. யுத்தத்துக்கும் இது பொருந்தும். அதன்படி பார்த்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான தீர்மானத்தையே எடுத்தது. மைத்திரிபால சிறிசேன என்பவர் உங்களின் எங்களின் வாக்குகளில் ஜனாதிபதியாக வந்திருக்காவிட்டால் மஹிந்த ராஜபக்ஸவின் சர்வாதிகாரம் கட்டுக்கடங்காமல் போய் நாம் பேரழிவை சந்தித்து இருப்போம். அதை தடுத்து நிறுத்தியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு செய்திருக்கின்ற பேருதவி ஆகும்.
2010 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் உச்ச மமதையில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காணப்பட்டார். பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீடு காரணமாக கண் துடைப்புக்கு பல பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தி விட்டு ஒரேயடியாக ஏமாற்றினார்.
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு கட்டத்தில் மஹிந்தவை பிரதமராக்கினார் அல்லவா? இதை எதிர்க்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். தமிழ் மக்களின் வாக்குகளில் ஜனாதிபதி ஆனதை மறக்கவில்லை என்று அவர் சொன்னபோது தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேன என்பவரை விரும்பியோ மதிப்பளித்தோ வாக்களித்து இருக்கவில்லை, மஹிந்த ராபக்ஸவுக்கு எதிரான வேட்பாளர் என்கிற ஒரே காரணத்துக்காகவே வாக்களித்தனர், ஆனால் அவரை நீங்கள் பிரதமராக்கி விட்டீர்களே? என்று நாம் அவருக்கு சொன்னோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பே தீர்மானிக்கின்ற சக்தியாக உள்ளது என்பதை முழுஉலகமுமே அறியும். இது நீங்கள் எமக்கு தந்த சக்தி. நாம் உங்களின் அபிப்பிராயத்தை செவிமடுத்துதான் தீர்மானம் எடுப்போம். தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கின்ற தீர்மானத்துடன் நீங்கள் தொடர்ந்தும் ஒன்றித்து நிற்க வேண்டும். உதிரிகளுக்கும் போலிகளுக்கும் ஏமாந்து விட கூடாது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்