அமைச்சர்கள் நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும்! கோடீஸ்வரன் எம்.பி. கோரிக்கை

  அமைச்சர்கள் பக்கச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு சில அமைச்சர்கள் நடந்து கொள்ளவில்லை. நாட்டிற்கு அமைச்சர் என்பதை அவர்கள் மறந்து சொந்த இனத்திற்கு மாத்திரம் அமைச்சர்கள் போல் செயற்படுகின்றனர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுக்கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு பனங்காடு ஜக்கிய கிராமிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை (15) விமரிசையான முறையில் இடம்பெற்றது.

இதன்போது ஒரு கோடி ரூபா செலவில் காபட் வீதியாக புனரமைக்கப்பட்ட சிவன் கோவில் வீதி மற்றும் பனங்காடு பாசுபததேசுவரர் ஆலயத்தில் 5 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பண்டகசாலை பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் 20 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு ஆகிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் பிரதேசங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்கின்ற பாரிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. இந்நிலையில் குடிநீர் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் குறித்த அமைச்சருடனும் தான் பலமுறை பேசியுள்ளேன். சண்டையிட்டுமுள்ளேன். விரைவில் அவர்கள் இதனை செய்து தருவதாகவும் எனக்கு வாக்குறுதி அளித்துமுள்ளனர். ஆனாலும் அவ்வாறு வாக்குறுதி அளித்து ஒரு வருடம் கடந்தும்; அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் பார்க்கும்போது தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றவர்களாக இருக்கின்றனர். இந்நிலைமாற வேண்டும். தொடர்ந்தும் இவ்வாறு வாழ முடியாது. இருக்கின்ற அமைச்சர்கள் பக்கச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு சில அமைச்சர்கள் நடந்து கொள்ளவில்லை. நாட்டிற்கு அமைச்சர் என்பதை அவர்கள் மறந்து சொந்த இனத்திற்கு மாத்திரம் அமைச்சர்கள் போல் செயற்படுகின்றனர். இரண்டு கிராமங்களை பிரிக்கும் பொதுவீதி ஒன்றில் ஒரு பக்கத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழர் வாழும் மற்றுமொரு பகுதிக்கு அவ்விணைப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய அமைச்சர்களின் செயற்பாடு என்றார்.

இருந்தபோதிலும் எவ்வாறாயினும் தமது பதவிக்காலத்தினுள் பனங்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீரைப் பெற்றுத்தருவேன் என உறுதியளித்தார்

இதேநேரம் ஆலையடிவேம்பில் மாத்திரம் 350 இற்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது அமைக்கப்பட்டுவருவாதாகவும் அவ்வாறு பார்க்கையில் அம்பாரை மாவட்டத்தில் எத்தனை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறி;ந்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதி அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் கௌரவ அதிதி அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பராசா உள்ளிட்டவர்களை பனங்காடு ஜக்கிய கிராமிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்ந்து கேணிக்கரைப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அதிதிகள் இணைந்து காபட் வீதியை திறந்து மக்கள் பாவனைக்காக கையளித்தனர்.. பின்னர் சிவன் ஆலயத்தில் நிர்மானிக்கப்பட்ட பண்டகசாலையினையும்  பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் நிர்மானிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கினையும் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதுடன் மங்கள விளக்கேற்றி மேடை நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.
இதேவேளை அதிதிகளை வரவேற்கும் முகமாக நர்த்தனாலய மாணவிகள் இணைந்து வழங்கிய நடனமும் அனைவரது வரவேற்பையும் பெற்றது.

பின்னராக தலைமையுரையினை ஆலயத்தலைவர் மா.ரகுதேவன் வழங்க கிராமத்தின் முக்கியஸ்தர்களினுடைய உரையும் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் மேலதிக அரசாங்க அதிபரும் ஏற்பாட்டாளர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.சுரேன் இணைப்பாளர் எம்.காளிதாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்