மக்கள் தேவையறிந்து அரச உத்தியோகத்தர் பணியாற்றவேண்டும்!

ஒரு கிராமத்தினுடைய அபிவிருத்தி என்பது அரசியல், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என மூன்று தரப்பினரிடமும் தங்கியுள்ளது. இம்மூன்று தரப்பினரும் இணைந்து மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தியை திட்டமிடும் போதே அத்திட்டம் முற்றும்முழுதாக வெற்றியடையும் என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுக்கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு பனங்காடு ஜக்கிய கிராமிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை (15) விமர்சையான முறையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

சமூகத்தின் பல்வேறு உதவிகளை பெற்று மக்களின் பங்களிப்புடன் அரசாங்கத்தின் வரிப்பணத்தில் இருந்து இலவச கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை பெற்று பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று அரச சேவையினை ஆற்றிவரும் உத்தியோகத்தர்கள் தங்களது சமூகத்தினுடைய தேவை அறிந்து சேவையாற்ற வேண்டும் என்றார்.

தன்னுடைய கிராமம் தன்னுடைய மக்கள் எனும் மனநிலையுடன் சேவையாற்றும்போது அதிகளவான சேவையினை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு அந்த மக்களினுடைய உரிமையினையும் அவர்களது தேவைப்பாடுகளையும் நிறைவேற்றக்கூடிய பல்வேறு கடமைகளையும் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இணைந்து மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

தற்காலத்தில் அரசசேவையில் இணைந்து கொள்ளும் உத்தியோகத்தர்கள் தங்களுக்கு வசதியான தமக்கு அருகில் உள்ள இடங்களில் சேவையாற்ற வேண்டும் எனும் மனோநிலையுடன் இருக்கின்றனர். அவர்களின் மனநிலைக்கேற்றதுபோல் நியமனங்கள் வழங்கப்படும்போது அதனை அவர்கள் முறையாக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தான் பிரதேச செயலாளராக கடமையாற்றிய கடந்த ஒன்பது வருடங்களில் அம்பாரை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற கோடீஸ்வரனின் சேவையினை நன்கு அறிந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்பே அவர் பல விடயங்களை மக்களுக்காக பெற்றுக்கொடுத்தவர் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புவதாகவும் கூறினார்.

இதனடிப்படையில் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் இறைவன் அவருக்கு வழங்கி எதிர்வரும் காலத்திலும் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கு சிறந்த மேலும் பல சேவையாற்ற மக்கள் சார்பில் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்