முச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் பலத்த காயம்

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்டம் “ஐஸ் பீலி” என்றழைக்கப்படும் இடத்தில், சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

17.08.2019 அன்று  இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில்  இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, உயிரிழந்ததாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

வலப்பனை – மந்தாரநுவர – எலமுல்ல பிரதேசத்தைச்  டி.பி.ரூபசிங்ஹ (வயது 50) ரோஹினி  குமாரி (வயது 45) ஆகியோரே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்விருவரும் கணவன், மனைவியென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

17.08.2019 அன்று எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி குறித்த முச்சக்கரவண்டியில் தாய், தந்தை, 06,16,19 வயதுடைய சிறுவன், சிறுமிகள் ஆகியோர்  பயணித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை தந்தை செலுத்தி வந்த நிலையில், கந்தப்பளை எஸ்கடேல் “ஐஸ் பீலி” என்ற இடத்தில் பிரதான பாதையை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்