சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என தனியாக மக்களை பிரிவினைப்படுத்தி இந்த நாட்டில் அரசியல் செய்ய முடியாது-அமைச்சர் பி.ஹரிசன்

சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என தனியாக மக்களை பிரிவினைப்படுத்தி இந்த நாட்டில் அரசியல் செய்ய முடியாது. அனைவரும் ஒன்றிணைந்தே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். அவ்வாறு எல்லா மக்களையும் ஒற்றுமைப்படுத்தி அரசியல் செய்கின்ற ஒரே கட்சி ஜக்கிய தேசிய கட்சியே என கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்ப்பாசனம் கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர்; தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அழைப்பின்பேரில் ஆலையடிவேம்பிற்கு வருகை தந்தார்.  வருகை தந்த அவர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்   இந்த அரசாங்காத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கும் போதெல்லாம் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அதுபோல் முஸ்லிம் காங்கிரசும் விசேடமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் கைகொடுத்து இந்த அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு உதவினர்.

அதுபோல் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், மன்சூர், இஸ்மாயில் உள்ளிட்டவர்கள் விலை போகதவர்களாகவும் பணத்திற்கு அடிமைப்படுத்த முடியாதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் மக்கள் நலன் கருதியே முடிவுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் வெள்ளை வான் கடத்தல், பயமுறுத்தல், ஆயுதங்களினால் கொலை செய்தல் போன்ற யுகமொன்றை ஏற்படுத்துவதற்கு இடமளிக்காதவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த முப்பது வருடகாலம் மிகவும் துக்கமானதுடன் அனைத்து அபிவிருத்திகளும் தடைப்பட்ட காலம். குறிப்பாக தமிழர்களே இதனால் பாதிக்கப்பட்டனர். ஆகவே இனிவரும் காலங்களில் குறித்த அபிவிருத்திகள் யாவும் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதற்கமைவாக குறித்த பிரதேசங்களில் இரு நெற் களஞ்சிய சாலை இந்த வருடத்தினுள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 600 இலட்சம் ரூபா செலவு செய்யப்படும் எனவும் கூறினார். அத்தோடு 12 குளங்களை புனரமைக்கவும்  12 கிலோமீற்றர்  விவசாய வீதிகளை செப்பனிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

மேலும் இச்செயற்பர்டுகள் யாவற்றையும் ஆரம்பித்ததன் பின்பே உங்களது பிரதேசத்திற்கு மீண்டும் வருவேன் எனவும் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் தயாகமகே… கடந்த 21 வருடங்களாக சமுர்த்தி முத்திரை மறுக்கப்பட்டவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் புதிய முத்திரைகளை வழங்கியுள்ளோம். முத்திரை கிடைக்காத தகுதியுள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் உரையாற்றுகையில்   வரலாற்றிலே முதல் முறையாக தமிழ்ப்பிரதேசங்களின் குறைகளை கண்டறியவும் அதனூடாக தீர்வினை பெற்றுக்கொடுக்கவும்  அமைச்சர் ஒருவர் வருகை தந்துள்ளார். இதனால் தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதனூடாக தமிழ் மக்கள் நீண்டகாலமாக விவசாயம் மீன்பிடி கால்நடை நீர்ப்பாசனம் போன்றவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்வில் அமைச்சர் தயாகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜ.எம்.மன்சூர், எஸ்.எம்.இஸ்மாயில், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டார, மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வருகை தந்த அதிதிகளுக்கு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இதன் பின்னர் பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொண்டனர்.

பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அதிதிகள் நிறைவாக கைத்தறி சாதனப் பொருட்களையும் மக்களிடம் கையளித்தனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்