சவேந்திரசில்வா இராணுவத்தளபதியாவாரானால் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்கிறார் சி.வி.கே!

யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிப்பது நல்லிணக்கம் உள்ளிட்ட எந்த கோட்பாட்டுக்கும் உட்படாத செயற்பாடு என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் புதிய தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சி.வி.கே சிவஞானம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கவின் பதவிக் காலம் கடந்த வருடம் ஒகஸ்ட் 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அவருக்கு மேலும் ஒரு வருட பதவி நீடிப்பு வழங்கப்பட்டது.

அதன்படி ஒகஸ்ட் 18 ஆம் திகதியான இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய தளபதிகளில் ஒருவராக பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுவரும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சவேந்திர சில்வாவை, ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதியாக நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் தொடர்பில் வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்