விவசாயிகளை அரசர்களாக்குவதே எமது நோக்கம் – சஜித்

விவசாயிகளையும் கைத்தொழில் துறையினரையும் அரசர்களாக்குவதே தமது நல்லாட்சி அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் நோக்கம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விவசாய சமூகத்தினருக்கான கிராமங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் நிழல் தரும் வகையில் கிராமங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

பொலன்னறுவை மாவட்டத்திற்கு வரும் வழியில் நாம் கண்ட இயற்கை வளம் மிகவும் புத்துணர்வை ஏற்படுத்துகின்றது. கிராமங்களுக்கே உரிய அழகையும் கொண்டிருக்கின்றது. இதுதான் இலங்கையின் உண்மையான வனப்பும், செழிப்புத் தன்மையும் ஆகும். இயற்கை வளத்தை இரசித்துக்கொண்டிருக்கும்போது வந்த காரியமும் மறந்து போகின்றது.

ஆனால் சிலருக்கு நாட்டின் அதிகாரம் கிடைக்கும்போது அவர்களுக்குரிய கடமை மறந்து போகின்றது. கிராமங்களின் முன்னேற்றங்களைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.

இந்த நாட்டில் 78 சதவீதம் விவசாயம் சார்ந்த நிலங்களாகவே இருக்கின்றமையை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

அதேவேளை, சாதாரண கைத்தொழில் துறையினர், நடுத்தர வர்க்கத்தினர், அரச துறையினர், இவர்கள்தான் இந்த நாட்டின் முக்கியமான பிரஜைகள்.

ஆனால், நாட்டில் வளங்கள் இருந்தபோதும், 54 சதவீதமான தேசிய வருமானத்தை சிறுபான்மையினரான தனவந்தர்களே அனுபவிக்கின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும். எங்கள் கண்முன்னே நடக்கும் இந்த அநியாயத்திற்கு இடமளிக்கக்கூடாது.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதைப் போன்றே நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் நிலைபெறச் செய்யவேண்டும்.

எமது விவசாய நாட்டில் புதிய லிபரல் வாதத்திற்கு இடமளிக்கக்கூடாது” என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்