ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்!

ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிட்டாலும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் உறுதியை வழங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “கடந்த 25 ஆண்டுகளில் எனது அனுபவத்திற்கு அமைய யார் நல்லவர் யார் திருடர் என்று என்னால் கூற முடியும்.

கடந்த 5 தொடக்கம் 10 வருடங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் இருந்த அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதிகள் பலரும் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்று நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்.

ஆனால் அமைச்சர் சஜித் பிரேமதாச போன்றவர்கள் அவ்வாறு அல்லர். எங்கள் அரசாங்கத்தில் இருக்கின்ற மிகவும் நியாயமான, மக்களின் நலன்கள் மீது அக்கறை கொண்டவர்தான் சஜித் பிரேமதாச.

நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே பொலன்னறுவையிலும் ஏழை எளிய மக்கள் நலன் கருதி வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். அதேவேளை, ஏனைய அரசியல் தரப்பினர் தொடர்பாக கதைப்பதற்கு நிறையவே இருக்கின்றது. தற்போது அதற்கு நேரம்போதாது.

இந்தநிலையில், நாட்டினுள் போதைப்பொருட்களினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. நகர் புறங்களைப் போன்றல்லாது கிராமப் புறங்களில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது.

எனவே. எமது கிராமிய மக்களை பாதுகாப்பதற்கு அவற்றை முற்றாக ஒழிக்கக்கூடிய ஒரு தலைவர்தான் எனக்கு அடுத்து வரவேண்டும்.

எனது ஆட்சி காலத்தில் ஜனநாயகத்திற்கும் மனிதவுரிமைகளுக்கு அதிகமாக இடமளித்துள்ளேன். அதேபோன்று எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களும் இதற்கு உறுதியளிக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்