புலிகள் பற்றிக் கூறும் உரிமை மஹிந்தருக்கு அறவே இல்லை!

சரவணபவன் எம்.பி. விசனம்

விடுதலைப்புலிகள் கூறியதாக தெரிவித்து பிரதமர் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டமென கூறும் உரிமை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

கிளிநொச்சி – வட்டக்கச்சி, மாயவனூர் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது 100 பேருக்கான உலருணவு பொதிகள், மரக்கன்றுகள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கி வைத்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டாமென்றார்கள் என்றும் அதை மனதிற்கொண்டு தற்போது அவருக்கு வாக்களிக்க வேட்டாமெனும் தோரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அன்று என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது. வாக்களிக்க வேண்டாமென கூறியதாக எங்கும் இல்லை. ஆனால் தற்போது அதனை காரணம் காட்டுகின்றனர். அதற்காக ரணிலுக்கு வாக்களியுங்கள் என்று நான் கூறவில்லை. மாறாக அதை கேட்கும் உரிமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இல்லையென்பதையே கூறுகின்றேன்.

எங்களுடைய முடிவுகள் யார் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டுமே ஒழிய யார் வரவேண்டும் என்பதில் கவனம் கொள்ளத்தேவையில்லை” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்