ஆலயங்கள் சமய பணிகளோடு சமூகப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்-அம்பாரை மாவட்டத்தில் 146 ஆலயங்களின் வளர்ச்சிக்கான நிதி

அம்பாரை மாவட்டத்தில் 146 ஆலயங்களின் வளர்ச்சிக்கான நிதி தன்னால் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் ஆலயங்கள் சமய பணிகளோடு மாத்திரம் நின்றுவிடாது சமூகப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

வரலாறுகள் பல கூறும் பழம்nரும் பதி அக்கரைப்பற்று பகுதி அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பண்டகசாலை திறப்பு விழா மற்றும் ஆலய சுற்றுக்கொட்டகைக்கான அடிக்கல் நாட்டு விழா அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஆலயத்தலைவர் க.வடிவேல் தலைமையில் நேற்று(18) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன், அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.ஜெயராஜ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான எம்.காளிதாசன் , ஆர். ஜெகநாதன் உள்ளிட்ட சமய நிறுவனங்களின் தலைவர்கள் ஆலய தலைவர்கள் கும்பாபிசேக குழுவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ஆலயங்கள் கல்விக்காக உழைப்பதுடன் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களையும் முன்கொண்டு செல்லும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். இதனை கருத்தில் கொண்டே முற்காலத்தில் அரசர்கள் ஆலயங்களுக்கு காணிகளை வழங்கி அதனூடாக வருகின்ற நிதியை பயன்படுத்தி சமூகப்பணியினையும் கல்விக் கூடங்களை அமைத்து கல்வியினையும் மேம்;படுத்தினர் என கூறினார்.

இதேவேளை கண்டி இராஜதானியின் ஆளுகைக்கு உட்பட்டு செயற்பட்ட இப்பழம்பெரும் ஆலயத்தை பாதுகாக்கப்படவேண்டியது தமது கடமை எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் வெள்ள காலத்தில் ஏற்படும் பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டும் இவ்வருடத்தினுள் அனைத்து வடிகான்களும் புனரமைக்கப்படும் எனவும் இதற்காக 6 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்விற்காக வருகை பாராளுமன்ற உறுப்பின் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஆலய சுற்றுக்கொட்டகைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார். பின்னர் நிர்மாணிக்கப்பட்ட பண்டகசாலையினையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகளை கண்டுகளித்த பாராளுமன்ற உறுப்பினரின் சேவையினை பாராட்டி ஆலய நிருவாகத்தின் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவித்தனர்.

நிறைவாக அறநெறிப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்