போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த பதவியை வகித்திருந்தார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்திருந்தது.

இதனையடுத்து இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக இழுபறிநிலை ஏற்பட்டிருந்தது.

இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தமைக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன.

மேலும் இந்த தீர்மானம் காரணமாக ஜனாதிபதி சிறிசேன தனது சொந்த கட்சியின் உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொண்டதோடு, ஐ.தே.க.வும் இந்த விவகாரத்தில் முரண்பட்டிருந்தது. இவ்வாறான நிலையிலேயே புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய தளபதிகளில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டார்.

குறிப்பாக யுத்த காலத்தில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணி ஊடாகவே தமது உறவுகள் கையளிக்கப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்டார்களென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்